உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதனையடுத்து ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது குரோஷியா.
21 ஆவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன. இதில் முதல் கட்டமாக லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றன. இதிலிருந்து 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றன.
பின்பு, 4 அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடின. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியல் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ், பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்து - குரேஷியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கிலேயே இருந்தன. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டப் போதும், கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையே தொடர்ந்தது. இதனையடுத்து இரண்டு அணிக்கும் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போதும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இரண்டாவது கூடூதல் நேரம் கொடுக்கப்பட்டது.
அதில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து இங்கிலாந்தின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலிக்காததால், குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
20 ஆண்டுகளுக்கு பின்பு அரையிறுதிப் போட்டியில் நுழைந்த குரோஷியா, முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.