2024-2025 ரஞ்சிக்கோப்பை போட்டிகளானது கடந்த அக்டோபர் 11 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. எலைட் பட்டியலில் இருக்கும் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொண்டு விளையாடி வருகின்றன. இதில், இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஹரியானா அணிக்காக விளையாடிவருகிறார்.
எப்போதும் தன்னுடைய அபாரமான சுழற்பந்துவீச்சுக்கு பெயர் போன யுஸ்வேந்திர சாஹல், இந்தமுறை தன்னுடைய அசத்தலான பேட்டிங்கிற்காக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஹரியானா அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடும் யுஸ்வேந்திர சாஹல், உத்திர பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 10வது வீரராக களத்திற்கு வந்து 152 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்து அணியை 453 ரன்கள் குவிக்க உதவினார். அவரின் ஆட்டத்தால் போட்டியை ஹரியானா சமனில் முடித்தது.
அதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மத்திய பிரதேச அணிக்கு எதிராக பேட்டிங் செய்த யுஸ்வேந்திர சாஹல் 142 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்ததுடன் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு 431 ரன்களுக்கு அணியை மீட்டெடுத்து வந்துள்ளார்.
இதுவரை பவுலிங்கால் மட்டுமே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்த சாஹல், தற்போது பேட்டிங் செய்வதை பார்த்த ரசிகர்கள் “குமரா உனக்கு பேட்டிங் லாம் பண்ண வருமா” என்ற மோடில் பாராட்டி வருகின்றனர்.