இங்கிலாந்து நாட்டில் ப்ரோம்ஸ்கிரோவ் கிளப் அணிக்காக ஆலிவர் ஒயிட்ஹவுஸ் என்ற 12 வயது வீரர் கிரிக்கெட் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குக்ஹில் அணிக்கு எதிராக நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் ஆலிவர் ஒயிட்ஹவுஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு அபாரமான சாதனையை நிகழ்த்தினார். ஆலிவர் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரட்டை ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இந்த ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசிய ஆலிவர் ஒயிட்ஹவுஸ் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 8 விக்கெட்டுகளை வேட்டையாடி உள்ளார். ஆலிவரின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தனது சாதனையை குறித்துப் பேசிய ஆலிவர் ''6 பந்திலும் 6 விக்கெட் வீழ்த்தியது, அதுவும் க்ளீன் போல்ட் ஆக்கியது நம்ப முடியாத வகையில் இருந்தது. அதிலும் முதல் பந்தில் எதிரணி பேட்ஸ்மேன் க்ளீன் போல்டாவார் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அந்த பந்து வைடாக செல்வது போன்று நினைத்தேன்'' என BBCக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆலிவரின் தாய் வழி பாட்டி 1969-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அன் ஷெர்லி ஜோன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.