ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்தும் வரும் ஒருவரின் வெற்றியானது, காண்போரையும் தன்னுடைய வெற்றியாகவே உணரச் செய்யும். அப்படி தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனியின் வெற்றியானது, ஒவ்வொரு இந்திய ரசிகனின் வெற்றியாகவே மாறி ஒன்றிப்போனது. அந்த வெற்றி நம்முடையதாக மாறுவது மட்டுமல்லாமல் பலபேரின் வெற்றி பயணத்திற்கான உந்துதலாகவும் மாறிப்போகும்.
அந்தவகையில் தற்போது தோனியை போலவே கஷ்டப்படும் பொருளாதார பின்புலத்தில் இருந்து வந்து, இந்திய கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பயணமானது வெற்றிப்பயணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமானது நமக்குள் தோன்றாமல் இல்லை. கஷ்டப்பட்டால் போதுமா இந்தியாவிற்காக தன்னை முன்னிலைப்படுத்தக்கூடிய தகுதி வேண்டாமா என்று கேட்டால், அதற்கு ஜெய்ஸ்வால் பலமடங்கு உழைப்பை போட்டுள்ளதாக அவருடைய சிறுவயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங் கூறுகிறார்.
2015-ல் 16 வயதில் 319 ரன்கள் அடித்து நாட் அவுட், 2019-ல் முதல்தர போட்டிகளில் குறைவான (17) வயதில் இரட்டை சதமடித்த முதல் வீரர், 2020-ல் யு-19 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது என தன்னுடைய உழைப்புக்கும் திறமைக்கும் ஏறுமுகத்தையே கண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 2020-ம் ஆண்டு ஐபிஎல் சோதனையாக மாறியது. அப்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும், கிடைத்த வாய்ப்பை இழக்கக்கூடாது என முதல் ஐபிஎல்லில் களம் கண்டார் ஜெய்ஸ்வால்.
ஜெய்ஸ்வாலின் முதல் ஐபிஎல் சீசன் குறித்து விஸ்டன் இந்தியாவுடன் பேசியிருக்கும் அவருடைய சிறுவயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், “2020-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து ஜெய்ஸ்வாலுக்கு முதல் ஐபிஎல் கால் வரும்போது, அவர் செல்வது சரியாக இருக்காது என்று நினைத்தேன். அது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தாலும், அப்போது அவர் தோள்பட்டை காயத்தோடு இருந்தார். இருப்பினும் அந்த வாய்ப்பை இழக்க வேண்டாம் என அவர் முதல் ஐபிஎல்லில் கலந்து கொண்டார்” என்று கூறினார். ஆனால் தோள்பட்டை காயத்தோடு இருந்த ஜெய்ஸ்வாலால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது.
2020 ஐபிஎல்லில் 3 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் வெறும் 90 ஸ்டிரைக் ரேட்டில் 13 சராசரியுடன் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். காயத்தோடு விளையாட சென்ற அவரால் பெரிதாக எதுவும் செய்ய முடியாமல் போனது. இருப்பினும் அந்த தோல்வியை ஏற்க முடியாத ஜெய்ஸ்வால், தன்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்து கதறி அழுதுள்ளார்.
போட்டிக்கு பிறகு மனம் உடைந்து பேசிய ஜெய்ஸ்வால், “சார், என்னுடைய முதல் ஐபிஎல்-ஐ நான் அழித்துவிட்டேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என ஜ்வாலா சிங்கிற்கு போன் செய்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது ஜ்வாலா தனது சொந்த ஊரான கோரக்பூரில் இருந்தார். அவரை சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. அதனால் “உடனடியாக கிளம்பி இங்கே வாருங்கள். நாம் புதிதாக ஆரம்பிக்கலாம்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார் அவர் ஜ்வாலா.
ஜ்வாலா மேலும் பேசுகையில், “ஜெய்ஸ்வாலை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தயார் செய்ய நினைத்தேன். எங்களுக்கு பயிற்சி செய்ய கோரக்பூரில் சிமெண்ட் ஆடுகளங்கள் கொண்ட மைதானம் கிடைத்தது. அங்கு கடினமான பிளாஸ்டிக் பந்துகளை கொண்டு பயிற்சியை மேற்கொண்டோம். பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்களை எல்லாம் முடிந்தவரை வேகமாக பந்துவீசக்கூறினேன்.
இந்தப்பயிற்சி முறையைப் எதிர்கொள்ள யஷஸ்வி ஆரம்பத்தில் பயந்துள்ளார். “சார், இந்த பயிற்சியால் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் நான் மிகவும் பாதிக்கப்படுவேன். எனது மொத்த பேட்டிங் நுட்பமும் பாழாகிவிடும்” என்று கூறினார். அதற்கு “ஒயிட்-பால் கிரிக்கெட்டில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தவும், பெரியதாக ஏதாவது செய்யவும் நினைத்தால், நீங்கள் இந்த வேகத்தில் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இந்த வேகமும், பவுன்ஸும் உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும்” என்று ஜ்வாலா அவரிடம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட ஜெய்ஸ்வால் கடினமான ஒரு பயிற்சியில் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஜ்வாலா கூறுகையில் “நான் ஒரு யு-19 வீரரை டி20 வீரராக மாற்ற வேண்டியிருந்தது. பயிற்சி காலங்கள் ஒரு மாதமாக நீடித்த நிலையில், அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டார். அதற்கு பின் அவரை வலைப்பயிற்சியில் இருந்து, களத்திற்கு எடுத்து வந்தேன். ஒல்லியாக இருந்த அவரை பெரிய ஹிட்டராக மாற்றும் முயற்சியில் நான் இறங்கினேன். அதில் அவருக்கு சந்தேகம் இருந்தது.
சந்தேகமடைந்த ஜெய்ஸ்வாலை சுமார் 70 முதல் 80 மீட்டர் வரை நீளமாக இருக்கும் பெரிய ஆடுகளத்திற்கு அழைத்து சென்று ‘சிக்ஸர் அடித்தால் போதும், நீங்கள் எத்தனை முறை அவுட் ஆனீர்கள் என்பது எனக்கு கவலையில்லை. சிக்ஸர் அடித்தால் போதும்’ என்று கூறினேன். அவரால் அடிக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கே இருந்தது. இருப்பினும் நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தேன். முடிவில் அது நடந்தது. நீங்கள் பெரிதாக ஏதாவது சாதிக்க விரும்பினால், இந்த வழியான தாக்குதலில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
நாங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடன்பட்டுள்ளோம். அவர்கள் தொடர்ந்து ஜெய்ஸ்வால் முன்னேற்றத்தை கவனித்தனர். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட கேப்டன் சாம்சன் பக்கபலமாக இருந்தார். அவர் ஜெய்ஸ்வாலிடம் ‘பயப்படாமல் இருங்கள், நீங்கள் விரும்பியபடி விளையாடுங்கள். அவுட் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த சூழலில் ஒரு வீரராக இதை செய்யவில்லை என்றால், வேறு எங்கு செய்யப்போகிறீர்கள்’ என்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மூன்று ஐபிஎல் சீசன்களுக்குப் பிறகு யஷஸ்வி இப்போது உச்சத்தில் இருக்கிறார். 625 ரன்கள், ஐபிஎல் சதம், ஐந்து அரைசதங்கள், ஸ்டிரைக் ரேட் 164 மற்றும் 26 சிக்சர்கள், 2023 ஐபிஎல் எமெர்ஜிங் வீரர் என்று பயணித்த ஜெய்ஸ்வால், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த பயணம் தொடர்ந்து வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகள்.