2023-ம் ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 22 வயதேயான யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெறும் ஒரு வருடத்தில் 16 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 1000 ரன்களை குவித்துள்ளார்.
இந்தியாவிற்காக குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த சுனில் கவாஸ்கர் (21 இன்னிங்ஸ்), மயங்க் அகர்வால் (19 இன்னிங்ஸ்), சட்டீஸ்வர் புஜாரா (18 இன்னிங்ஸ்) முதலிய வீரர்களை பின்னுக்குதள்ளி இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.
2024-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இதுவரை 29 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு WTC சுழற்சியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக இருக்கும் பென் ஸ்டோக்ஸின் சாதனையை முறியடிக்க, இன்னும் 3 சிக்சர்களே யஷஸ்விக்கு மீதமாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரையில் 2019-2021, 2021-2023 என்ற சுழற்சிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது மூன்றாவது சுழற்சியாக 2023-2025 WTC தொடர் நடந்துவருகிறது.
ஒரு WTC சுழற்சியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக 31 சிக்சர்களுடன் (2019-21 WTC) இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை பின்தொடர்ந்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 29 சிக்சர்கள் (2021-23 WTC) அடித்திருக்கும் நிலையில், இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் அவரின் சாதனையை முறியடிக்க முடியும்.
2023-2025 WTC சுழற்சியில் இன்னும் இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள், நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடவிருக்கும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பென் ஸ்டோக்ஸின் இந்த சாதனையை முறியடிப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு WTC சுழற்சியில் 50 சிக்சர்களை அடிக்கும் முதல் வீரராக மாறவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்திருக்கும் 29 சிக்சர்களில் 26 சிக்சர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே அடிக்கப்பட்டவை.