ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 172 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்கள், கேஎல் ராகுல் 62 ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு அதிர்ச்சியளித்தது. முதல் இன்னிங்ஸில் 0 ரன்னில் வெளியேறிய ஜெய்ஸ்வால் 193 பந்துகளுக்கு 90 ரன்கள் அடித்து சிம்ம சொப்பனமாக விளங்கினார். மறுமுனையில் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய கேஎல் ராகுல் 153 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அசத்தினார்.
இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஆஸ்திரேலியா பவுலர்களின் எனர்ஜியை சிதறடித்தது மட்டுமில்லாமல், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் லபுசனே இரண்டு வீரர்களுக்கு எதிராகவும் கிண்டலாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.
மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஜெய்ஸ்வால், அதற்கு அடுத்த பந்தை அடிக்க முயன்று மிஸ் செய்தார். அடுத்த பந்தை டிபன்ஸ் செய்த ஜெய்ஸ்வால் மிட்செல் ஸ்டார்க் சிரிந்து கொண்டிருப்பதை பார்த்து “என்ன பார்க்கிறீர்கள், உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது” என கிண்டல் செய்தார்.
முதல் இன்னிங்ஸில் வேகமாக பந்துவீசி பீட் செய்த இந்திய பவுலர் ஹர்சித் ரானாவை பார்த்து “உன்னை விட நான் வேகமாக பந்துவீசுவேன்” என ஸ்டார்க் கூறியிருந்ததை தொடர்ந்து ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் பதிலடி கொடுக்கும் வகையில் கிண்டல் செய்தார்.
அதேபோல கேஎல் ராகுலும், ஜெய்ஸ்வாலும் சிங்கிளுக்கு செல்லும்போது, பந்தை கையில் எடுத்து லபுசனே ரன் அவுட் செய்வது போல் ரியாக்சன் செய்தார். அதை பார்த்த ஜெய்ஸ்வால் ”எங்கே ரன்அவுட் செய் பார்க்கலாம்” என்பது போல க்ரீஸ் லைனுக்கு வெளியே சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார். இது நகைச்சுவையாகவே அமைந்தாலும் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவின் அதிரடி அணுகுமுறைக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். நாளை ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மண்ணில் சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.