இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து முதல் போட்டியிலும், இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரின் அசத்தலான சதத்தால் 445 ரன்களை எட்டியது.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் பென் டக்கெட் “பாஸ்பால் அட்டாக்” என்றால் என்ன என்பதை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட அனைத்து பவுலர்களுக்கு எதிராகவும் காட்டடி அடித்த பென் டக்கெட், 88 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
ஒரு கட்டத்தில் 224 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இருந்த இங்கிலாந்து அணி, எப்படியும் 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 153 ரன்களில் பென் டக்கெட் அவுட்டாகி வெளியேற, அதற்கு பிறகு களமிறங்கிய ஒரு இங்கிலாந்து பேட்டர் கூட ஒழுங்காக விளையாடவில்லை. 319 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் கேப்டன் வெளியேறினாலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன்களை எடுத்துவந்தனர்.
கில் நிலைத்து நின்று விளையாட இங்கிலாந்து பவுலர்களை சிக்சர், பவுண்டரிகளாக வெளுத்து வாங்கிய யஷஸ்வி 122 பந்துகளில் சதமடித்து அசத்தினார். வெறும் 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 13 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால், 2 சதங்கள், 1 இரட்டை சதம் மற்றும் 3 அரைசதங்களை பதிவு அசத்தியுள்ளார். 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 104 ரன்களுடன் களத்திலிருந்த யஷஸ்வி, தசைபிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் பாதியிலேயே வெளியேறினார்.
13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 60க்கும் மேற்பட்ட சராசரி வைத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 டெஸ்ட் சதங்களை அதிவேகமாக பதிவுசெய்த சேவாக் மற்றும் மஞ்ச்ரேக்கர் இருவரின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
13 இன்னிங்ஸ்களில் சேவாக் - ஜெய்ஸ்வால்:
சேவாக்: 13 இன்னிங்ஸ் | சராசரி 53.31 | SR 66.63
யஷஸ்வி: 13 இன்ங்ஸ் | சராசரி 62.25 | SR 65.87
மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையுடன் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.