பெரிதும் வசதியில்லாத பின்புலத்தில் இருந்து வந்து கிரிக்கெட் ஒன்றை மட்டுமே வாழ்க்கையாக கொண்டு 11 வயதில் மும்பைக்கு வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், கடினமான போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
யு19 உலகக்கோப்பையில் தன்னுடைய அபாரமான ஆட்டத்திறனால் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கவனம் பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2020 ஐபிஎல் ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.2.40 கோடிக்கு போட்டிகளுக்கு இடையே எடுக்கப்பட்டார். 2021 மற்றும் 2022 ஐபிஎல் தொடர்களில் விஸ்வரூபம் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார்.
அறிமுக போட்டியிலேயே சதமடித்து 171 ரன்களை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரருக்கான மெட்டீரியலாக பார்க்கப்பட்டார். அதற்குபிறகு தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியிருக்கும் ஜெய்ஸ்வால், 7 டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதங்கள், 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை பதிவுசெய்து பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்திருக்கும் நிலையில், மும்பையில் ரூ.5 கோடி மதிப்பிலான அப்பார்ட்மண்ட் ஒன்றை ஜெய்ஸ்வால் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணி கண்ட்ரோல் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, “ரியல் எஸ்டேட் தரவுதளமான Zapkey உடன் அணுகப்பட்ட ஆவணங்களின்படி, இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் ரூ.5.38 கோடி ரூபாய்க்கு பாந்த்ரா கிழக்கில் பத்து BKC திட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். அந்த அபார்ட்மெண்ட் 1,110 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் ”இந்த கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒப்பந்தத்தை ஜெய்ஸ்வால் கடந்த ஜனவரி 7, 2024 அன்று பதிவு செய்ததாகவும், 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குடியிருப்பு பணிகள் இந்த ஆண்டு நிறைவுபெற்று ஒப்படைக்கப்படும்” என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.