இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள், இரண்டு அரைஅசதங்களை பதிவுசெய்து அசத்திவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பவுலர்களை தனியொரு ஆளாக டாமினேட் செய்துவருகிறார்.
அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை பதிவுசெய்து சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், தற்போது ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை பதிவுசெய்த இந்திய வீரர் என்ற சாதனையை நோக்கி நகர்ந்துவருகிறார். தற்போது 600 ரன்களை கடந்திருக்கும் யஷஸ்வி, விராட் கோலியின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்கும் நிலையில் அருகில் இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 55 ரன்களை கடந்த போது, ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களை பதிவுசெய்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தினார். 4 டெஸ்ட் போட்டிகளில் 85 & 15, 209 & 17, 10 & 214*, 73 முதலிய ரன்களை குவித்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 618 ரன்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் மற்றும் திலீப் சர்தேசாய் முதலிய நான்கு வீரர்களுக்கு பிறகு 5வது வீரராக இணைந்துள்ளார்.
இந்த பட்டியலில் இரண்டு முறை 700 ரன்களுக்கு மேல் அடித்து சுனில் கவாஸ்கர் (774, 732) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்து (692, 655, 610) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ராகுல் டிராவிட் இரண்டு முறை 600 ரன்களுக்கு மேல் (619, 602) அடித்துள்ளார். விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் 75 ரன்கள் மட்டுமே யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மீதமுள்ளது.
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 974 ரன்களுடன் டான் பிராட்மேன் முதலிடத்தில் நீடிக்கிறார்.