இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருங்கால வீரர்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ள ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் பெயர்களை 2024 சம்பள பட்டியலில் சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டுபோட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதால் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே சிறப்பான பங்களிப்பை அளித்திருந்ததுடன், வெற்றிக்கும் வித்திட்டனர்.
இதுதவிர, சமீபகாலமாக அவரது செயல்பாடுகளும் சிறப்பாகவே அமைந்துவருகின்றன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் பிசிசிஐ, அவர்களுக்கு மத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் கொடுக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுக்காக அந்த சமயத்தில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள், எந்த அளவுக்கு செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களை வருடாந்திர சம்பள மத்திய ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சேர்ப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் சி, பி, ஏ மற்றும் ஏ ப்ளஸ் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் இந்தியாவுக்கு விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.7 கோடியாகும். ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.