இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக, இதன் அரையிறுதியில் இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன. அதேநேரத்தில் இதில் நான்காவதாகக் கலந்துகொள்ள இருக்கும் அணி எது என்பதில் போட்டி நிலவுகிறது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்கான் ஆகிய அணிகள் நீடிக்கின்றன.
இதில் யார் வெற்றியை வசப்படுத்துகிறார்களோ, அவர்களுக்குத்தான் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இந்த மூன்று அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியை பதிவுசெய்து 8 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இருப்பினும் நியூசிலாந்து அணி ரன்ரேட் விகிதாசார அடிப்படையில் நூலிழையில் முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு நெட் ரன் ரேட் நெகட்டிவில் உள்ளது.
இதையும் படிக்க: பீகார்: 65% இடஒதுக்கீட்டு மசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடப்புத் தொடரில் நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றிருப்பதுடன், சில புதிய சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நடப்பு உலகக்கோப்பையில் 500 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்னும் லீக் போட்டிகளே முழுமையாக முடிவுபெறாத நிலையில், இவ்வளவு சிக்சர்கள் அடிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக உலகக்கோப்பையில், நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை 464வது சிக்ஸரை அடித்திருந்தது. இதுவே, ஒரு சாதனையானது.
அதாவது. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் மொத்தமாக 463 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருந்தன. அது, இலங்கை மற்றும் வங்கதேச போட்டியின்போது தகர்க்கப்பட்டது. தொடர்ந்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து போட்டியின்போது 500 சிக்சர்கள் அடிக்கப்பட்டு, ஐசிசி வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த 500வது சிக்சரை, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி அடித்தது.
48 ஆண்டுக்கால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், அதிலும் 50 ஓவர் உலகக்கோப்பையில் தற்போது மட்டுமே 500 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆக, இது புதிய வரலாறாகப் பதிவாகி இருக்கிறது. அதேநேரத்தில் நடப்புத் தொடரில் இன்னும் எஞ்சிய போட்டிகள் இருப்பதால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இதையும் படிக்க: “ஷாகிப் அல் ஹசன் மீது கற்கள் வீசக்கூடும்” மாத்யூஸின் சகோதரர் எச்சரிக்கை
இதற்கு முன்பு 2015 உலகக்கோப்பையில் 463 சிக்சர்களும், 2007இல் 373 சிக்சர்களும், 2019இல் 357 சிக்சர்களும், 2003இல் 266 சிக்சர்களும், 2011இல் 258 சிக்சர்களும், 1999இல் 153 சிக்சர்களும் அடிக்கப்பட்டிருந்தன.
நடப்பு உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்லும், இந்திய வீரர் ரோகித் சர்மாவும் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 22 சிக்சர்கள் அடித்துள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் உள்ளார். அவர் 20 சிக்சர்கள் அடித்துள்ளார்.