சர்வதேச கிரிக்கெட்டில் 2 சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் நடத்தப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது, இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3 ஆவது டி20 போட்டி. முன்னதாக இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் சமனானது.
ஆனால், அப்போது அதிக பவுண்டரிகள் விளாசிய அணியாக இருந்த இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து சூப்பர் ஒவர் சமனானால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்த சட்டம் திருத்தப்பட்டது.
அதன்படி, இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3 ஆவது டி20 போட்டியில் சூப்பர் ஓவர் சமனானதால் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டி20 சதங்கள் விளாசிய வீரராக அவர் உருவெடுத்துள்ளார். அவருக்கு இது 5 ஆவது சதமாகும். அதேபோல், 20 ஆவது ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணியாக இந்தியா சாதனைப்படைத்துள்ளது.
20 ஆவது ஓவரில் 36 ரன்களை ரோகித் மற்றும் ரிங்கு சேர்ந்து விளாசினர். இத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் 34 முறை டக் அவுட் ஆன சச்சினை விராட் கோலி முந்தியுள்ளார். சர்வதேச டி20யில் முதல் முறையாக அவர் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.