நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே தழுவாத இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது, கோப்பை வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை வெல்லும் என்ற கனவு சிதைந்ததால் பலரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை பாராட்டும் வகையிலும் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்தன.
'தோத்துட்டோம்னு ஏன் கவலைபடுறீங்க' என்பதில் தொடங்கி, மஞ்சள் ஜெர்சியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக கருதுங்கள் என பல்வேறு மீம்ஸ்கள் இணையத்தில் உலா வந்து கிரிக்கெட் ரசிகர்களின் சோகத்திற்கு சிரிப்பு மருந்தாக அமைந்தது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலேசென்று, கிரிக்கெட்டே சூதாட்டம் என்பதால் அதனை நான் பார்ப்பதில்லை என, உன்னை நினைத்து திரைப்படத்தில் நடிகை லைலா பேசும் வசனமும் நெட்டிசன்களை கவர்ந்தது. கிரிக்கெட்ட விடுங்கப்பா வாழ்க்கையா பாருங்க என வடிவேலு பேசுவது போன்ற மீம்ஸ்களும் இணையத்தில் உலா வந்தன. அரசியல்வாதிகளையும் மீம்ஸ்-கள் விட்டு வைக்கவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மொகுவா மொய்த்ரா தனது சமூக வலைதள பக்கத்தில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு, ஜவஹர்லால் நேரு மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய அரசை சீண்டும் விதமாக வேடிக்கையாக பதிவிட்டிருந்தார்.
அதேநேரத்தில், இந்திய அணி எப்படியும் வெற்றிபெறும் என மீம்ஸ் தயார் செய்து வைத்திருந்தது வீணாய்போனதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் உள்ளக்குமுறல்களை கொட்டித் தீர்த்ததையும் பார்க்க முடிந்தது. எது எப்படியோ, இந்தியாவின் கனவுக்கோப்பை கை நழுவி போனபோதும், கிரிக்கெட் ரசிகர்களின் கவலையை மறக்க வைக்கும் பணியை மீம்ஸ் கிரியேட்டர்கள் கச்சிதமாக செய்துள்ளனர் என்று நிச்சயமாக கூறலாம்.