2023 உலகக்கோப்பை: அரையிறுதிக்குச் செல்லும் 4 அணிகள் எவை? ஜாம்பவான்களின் கணிப்பில் இந்தியா எப்படி?

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குச் செல்லப்போகும் முக்கியமான 4 அணிகள் எவையென ஜாம்பவான்களால் கணிக்கப்பட்டுள்ளது.
world cup teams
world cup teamsicc twitter
Published on

இன்னும் சில தினங்களில் (அக்.5) 50 ஓவர்களைக் கொண்ட 13வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் களைகட்ட இருக்கிறது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக்கோப்பைக்கு முன்னதாகப் பயிற்சிப் போட்டியிலும் விளையாட உள்ளனர். இத்தகைய போட்டிகள் இன்று தொடங்குகின்றன. அதேநேரத்தில் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19வரை நடைபெற இருக்கிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 8 அணிகள் நேரிடையாகத் தகுதிபெற்ற நிலையில், இலங்கையும் நெதர்லாந்தும் தகுதிச்சுற்றில் விளையாடி உலகக்கோப்பை தொடரில் நுழைந்தன. முதல்முறையாக இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, தகுதிச் சுற்றில் சோடை போனதால், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. தகுதிச்சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அரையிறுதிக்குச் செல்லும்.

இந்த நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்தும் வரும் அக்.5ஆம் தேதி உலகக்கோப்பை முதல் போட்டியில் களம் காண உள்ளன. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் 8ஆம் தேதி சென்னையில் மோத இருக்கின்றன. இந்த நிலையில், தற்போதே எல்லோருக்கும் உலகக்கோப்பை ஜூரம் ஒட்டிக்கொண்டுள்ளது. இதையடுத்து, அதைப் பற்றிய செய்திகளைச் சிலாகித்து வருகின்றனர். அதிலும் சில ஜாம்பவான்கள் நடப்பு உலகக்கோப்பை தொடரில் குறிப்பிட்ட சில அணிகள்தான் அரையிறுதிக்குச் செல்லும் என ஆருடம் சொல்லியிருக்கின்றனர்.

ஜாக் காலிஸ், பின்ச், கிறிஸ் கெயில், வாட்சன்

தென்னாப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளையும்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பின்ச், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளையும்,

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளையும்,

ஆஸ்திரேலிய வீரர் வாட்சன், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளையும் கணித்துள்ளனர்.

கெளதம் கம்பீர் to ராபின் உத்தப்பா.. இந்திய வீரர்களின் கணிப்பு

இந்திய வீரர்களான கெளதம் கம்பீர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளையும்,

சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளையும்,

இர்பான் பதான், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளையும்,

முரளி கார்த்திக், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளையும்,

சஞ்சய் மஞ்சரேக்கர் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளையும்,

ராபின் உத்தப்பா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் கணித்துள்ளனர்.

ஆக, மேற்கண்ட ஜாம்பவான்கள் கணித்துள்ள பட்டியலில் அரையிறுதிக்குச் செல்லும் அணிகளில் கட்டாயம் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

அடுத்த வரிசையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாக விளங்கினாலும், சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்தியா கோப்பையை வெல்வதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

மேலும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் தற்போது பலமாக விளங்குவதால் அவ்வணிகளிடையேயும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com