தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அசத்தலாக ஆடி சதமடிக்க, அறிமுக வீராங்கனை ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, பெங்களூருவில் அமர்க்களப்படுத்தியிருக்கிறது இந்திய அணி.
தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ஒருநாள் தொடர் பெங்களூருவிலும், மற்ற தொடர்கள் சென்னையிலும் நடக்கின்றன. முதல் ஒருநாள் போட்டி சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் தொடங்கியது. வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணிக்கு அசத்திய ஆஷா ஷோபனாவுக்கு ஒருநாள் தொடரில் அறிமுகமாகவும் வாய்ப்பு தரப்பட்டது. சமீபமாக அசத்திக்கொண்டிருக்கும் தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதாவும் இந்த அணியில் இடம்பிடித்தார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங் தேர்வு செய்தார். WPL சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பெரும் ஆரவரத்தோடு ஓப்பனராகக் களமிறங்கினார். ஆனால், மற்றொரு தொடக்க வீராங்கனை ஷெஃபாலி வெர்மாவுக்கு தொடக்கம் சிறப்பானதாக இருக்கவில்லை. 7 ரன்கள் அடித்திருந்த அவர் கீப்பர் ஜாஃப்தா பிடித்த அட்டகாசமான கேட்சால் நான்காவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய அணி தொடர் சரிவை சந்தித்தது. ஹேமலதா (12 ரன்கள்), ஹர்மன்ப்ரீத் (10 ரன்கள்), ஜெமீமா ராட்ரீக்ஸ் (17 ரன்கள்), ரிச்சா கோஷ் (3 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்துகொண்டே இருந்தார்கள். 21.5 ஓவர்களில் 99 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது இந்திய அணி.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்மிரிதி மந்தனா நிலைத்து நின்று நிதானமாக ஆடினார். ஆறாவது விக்கெட்டுக்கு அவரோடு ஜோடி சேர்ந்த தீப்தி ஷர்மாவும் பொறுப்போடு ஆட, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகத் தொடங்கியது. விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நிதானமாக ஆடீயிருந்தாலும் தொடர்ச்சியாக பௌண்டரிகளும் அடித்தார் ஸ்மிரிதி. அதனால் 61 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார் அவர். நன்றாக சென்றுகொண்டிருந்த அந்த பார்ட்னர்ஷிப்பை 38வது ஓவரில் உடைத்தார் அயபோங்கா காகா. 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் தீப்தி. அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் பூஜா வஸ்த்ராக்கரும் தீப்தி போலவே ஸ்மிரிதிக்கு உறுதுணையாக ஆடினார். தொடர்ந்து அசத்திய ஸ்மிரிதி 116 பந்துகளில் தன் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவரது ஆறாவது ஒருநாள் சதம். அதைவிட சிறப்பு இதுதான் இந்தியாவில் அவர் அடிக்கும் முதல் சதம். அதுவும் பெங்களூருவில்!
அதன்பிறகும் அதிரடியாக ஆடிய ஸ்மிரிதி, 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் பூஜாவும் அதிரடி காட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது இந்தியா. 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் பூஜா வஸ்த்ராக்கர்.
மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் லாரா வோல்வார்ட்டை நான்காவது பந்திலேயே வெளியேற்றினார் ரேணுகா சிங். அடுத்து களமிறங்கிய அனீகீ பாஷ் பூஜாவின் பந்துவீச்சில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஓப்பனர் பிரிட்ஸும் 18 ரன்களில் அவுட் ஆக, 33-3 என தடுமாறியது தென்னாப்பிரிக்கா. அதன்பிறகு ஜோடி சேர்ந்த சீனியர் வீராங்கனைகள் சுனே லூஸ், மரிசான் காப் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தாலும் அவர்களால் அந்த அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. தன் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஆஷா ஷோபனா, மரிசான் காப்பை தன் முதல் விக்கெட்டாக மாற்றினார்.
அணியின் ஸ்கோர் 72 ரன்களாக இருந்தபோது காப் வெளியேறினார். அதன் பிறகு அந்த அணியால் சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தன. அதுவும் ஆஷா தனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஆடுகளத்தில் தொடர்ந்து அசத்தினார். கடைசியில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் கிளாஸ், காகா, மலாபா அனைவரையும் அவர் மொத்தமாக காலி செய்ய, தென்னாப்பிரிக்க அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தன் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
8.4 ஓவர்கள் பந்துவீசிய அவர், 2 மெய்டன்கள் வீசியதோடு மட்டுமல்லாமல் 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இறுதியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து சரிவைச் சந்தித்து கொண்டிருந்தபோது நிலைத்து நின்று ஆடியதோடு மட்டுமல்லாமல், அதிரடியும் காட்டி அசத்தல் சதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா, பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார்.