இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிலபல மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. வீரர்களின் காயம், காயத்திலிருந்து மீண்டிருக்கும் வீரர்களின் வருகை, ஃபார்ம் என பல காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ரோஹித் அண்ட் கோ. ராஜ்கோட் டெஸ்ட்டுக்கு என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமன் செய்தது இந்தியா. ஒரு வார இடைவெளிக்குப் பின்பு, மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் 15ம் தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஒருசில சிக்கல்கள் இருக்கின்றன. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் பெர்சனல் காரணங்களுக்காக அணியில் இடம்பெறவில்லை. சுமாராக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் கழட்டிவிடப்பட்டிருக்கிறார். ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த கேஎல் ராகுல் இப்போது முழு ஃபிட்னஸ் அடையாததால், மூன்றாவது போட்டிக்கான அணியில் அவருக்குப் பதில் தேவ்தத் படிக்கல் இடம்பெற்றிருக்கிறார். போக, காயம் காரணமாக விசாகப்பட்டினத்தில் ஆடாத ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியிருக்கிறார்.
கடந்த போட்டியில் ஆடிய அணியில் கட்டாய மாற்றமாக ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ஒரு பேட்ஸ்மேன் புதிதாக அணியில் இடம்பெறவேண்டும். அதனால் சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் இருவரில் ஒருவர் விளையாடியே ஆகவேண்டும். சர்ஃபராஸ் கான் தொடர்ந்து முதல் தர போட்டிகளில் அசத்தியிருப்பதால், முன்பே அணியில் இணைந்திருப்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுமே அவர் எப்போது இந்திய அணிக்கு விளையாடுவார் என்று பார்க்கக் காத்துக்கிடக்கிறது. அதனால் அவரே இந்திய அணியின் முதல் சாய்ஸாக இருப்பார். அதேசமயம் மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்று அணி நிர்வாகம் நினைத்தால் படிக்கல் வாய்ப்பு பெறலாம். இருந்தாலும், ஜடேஜா, அக்ஷர் போன்றவர்கள் இருப்பதால் அப்படியொரு முடிவு எடுக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
ஜடேஜா என்று சொல்லும்போது, அவர் யாருக்குப் பதிலாக இந்தப் போட்டியில் விளையாடுவார் என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் இருவரில் ஒருவரின் இடம் அவரால் கேள்விக்குறியாகும். அக்ஷர் படேல், ஜடேஜாவைப் போல அதே இடது கை ஸ்பின்னர் என்பதால் அவருக்குப் பதில் அப்படியே ஜடேஜா ஆடலாம். குல்தீப் கடந்த போட்டியில் நன்றாகப் பந்துவீசியிருக்கிறார். அவரது சைனாமேன் பந்துவீச்சுக்கு இங்கிலாந்து அணி சற்று தடுமாறவே செய்தது. ஆனால், குல்தீப்பால் பேட்டிங்கில் கைகொடுக்க முடியாது. அக்ஷர் படேல் அந்த இடத்தில் நல்ல பங்களிப்பைக் கொடுக்கிறார். அதனால் இந்திய அணி அவர்கள் இருவரில் யாரை ஜடேஜாவுக்குப் பதில் நீக்கும் என்பது பெரிய குழப்பம் தான்.
மூன்றாவதாக வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்குப் பதில் மீண்டும் முகமது சிராஜ் இந்தப் போட்டியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் சிராஜ் சுமாராகத்தான் ஆடினார். இரண்டாவது போட்டியில் அவருக்குப் பதில் ஆடிய முகேஷ் குமாரும் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் மீண்டும் சிராஜ் இந்தப் போட்டியில் ஆடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
இவைபோக, கடந்த இரு போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காத விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்துக்கு பதில் துருவ் ஜுரெல் அணியில் இடம்பெறலாம் என்றும் பேசப்படுகிறது. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே அவர் 92 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். போக, இரண்டாவது டெஸ்ட்டில் அவருடைய விக்கெட் கீப்பிங்கும் சற்று விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அதனால் அவரும் இந்தப் போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதியான மாற்றம்: ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் சர்ஃபராஸ்/படிக்கல்
உறுதியான மாற்றம்: அக்ஷர்/குல்தீப் பதில் ரவீந்திர ஜடேஜா
மாற்றத்துக்கான வாய்ப்பு: முகேஷ் குமாருக்குப் பதில் முகமது சிராஜ்
மாற்றத்துக்கான வாய்ப்பு: கேஎஸ் பரத்துக்குப் பதில் துருவ் ஜுரெல்