2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்ரிக்காவில் நடைபெற்றது. சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் 9 வெற்றி, 2 தோல்வியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுமுனையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 11 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது. ஜோகன்னஸ் பர்க்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, அசுரத்தனமாக ஆடி ரன்களை குவித்தது.
கில்கிறிஸ்ட் 57 ரன்களும் ஹெய்டன் 37 ரன்களும் எடுத்த நிலையில் கேப்டன் பாண்டிங் சூறாவளியாக சுழன்றடித்து ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 140 ரன்களை குவித்தார். டேமியன் மார்ட்டின் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கை குறிவைத்து ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்த சேவாக் 81 பந்தில் 82 ரன்கள் விளாசி ஓரளவு நம்பிக்கை தந்தாலும் மற்றவர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
டிராவிட் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 47 ரன் எடுத்தார். இந்தியா 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. 20 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அந்த கசப்பான தோல்விக்கு கணக்கு தீர்த்து இனிப்பான வெற்றியை இந்திய அணி இந்த ஆண்டு பரிசளிக்குமா என காத்துள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.