ஏன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்? உயர்த்தி நிறுத்தும் 4 மாண்புகள்!
தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான “பேஸ்பால்” அணுகுமுறை அதிகமாக பேசப்படுகிறது. காரணம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ப்ரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்றதிலிருந்து அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை ஆடிவருகிறது. டெஸ்ட்டில் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாடும் இங்கிலாந்து அணி அதில் வெற்றியையும் கண்டுவருவதால் “பேஸ்பால்” என்பது பேசுபொருளாக மாறியது.
தற்போது அதனை மற்ற அணிகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன, அது பல அணிகளுக்கு சாதகமான முடிவுகளை பெற்றுத்தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கிலாந்தின் இந்த அணுகுமுறைக்கு முன்னதாகவே விராட் கோலி தனித்துவமான அணுகுமுறையை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்தியிருந்தார். அது பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் ஒரு அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றியது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே விராட் கோலிதான் என்று சொன்னால் அது மிகையாகாது.
1. எந்த அணியை வேண்டுமானாலும் அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தலாம்..
டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து எப்போதும் குரல் கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. அவர் எவ்வளவு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசித்தார், எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
விராட் கோலி தலைமையிலான இந்திய நிர்வாகம், அட்டாக்கிங் பேட்டிங் மட்டுமில்லாமல் அட்டாக்கிங் பந்துவீச்சு என்பதையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துவந்தது. விராட் கோலியின் இந்த அணுகுமுறைதான் அட்டாக்கிங் பந்துவீச்சுக்கு தகுந்தாற்போல் இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர்கள் நிரம்பிய ஒரு யூனிட்டாக மாற்றியது. எந்த முடிவையும் துணிச்சலாக எடுக்கும் அவருடைய மாற்றத்திற்கான விதை, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை இதற்கு முன் செய்யாத பல சாதனைகளை செய்ய வைத்தது.
அவர் ஏற்படுத்திய இந்த அட்டாக்கிங் அணுகுமுறையால்தான், தொடர்ச்சியாக இரண்டுமுறை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரின் இந்த அணுகுமுறையால்தான், உலக கிரிக்கெட் நாடுகளுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்த ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தி 10 ஆண்டுகளாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவரின் இந்த அணுகுமுறையால்தான் எந்த அணி வேண்டுமானாலும் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் சென்று வெற்றிபெற முடியும், தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. இதனால்தான் விராட் கோலி தலைசிறந்த கேப்டனாக தெரிகிறார்.
இதை 2019 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டனான இயன் மோர்கனும் ஒப்புக்கொண்டுள்ளார். ஒருமுறை விராட் கோலி என்ற டெஸ்ட் கேப்டன் குறித்து பேசியிருந்த அவர், “என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் நம்பமுடியாததாகவே இருந்து வருகிறது. உண்மையில் அது உங்களுக்கு சவாலான நேரத்தை தரக்கூடியது. டெஸ்ட் கிரிக்கெட் ஒரு கேப்டனாக விராட் கோலியை இழந்துவிட்டது. அவர் அதை எவ்வளவு நேசித்தார் மற்றும் அதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதைப் பற்றி எப்போதும் அவர் தெளிவாகப் பேசியுள்ளார். முன்பு விராட் கோலி செய்ததைதான் தற்போது பென் ஸ்டோக்ஸ் செய்துவருகிறார்”என்று மோர்கன் மிரர் கூறியுள்ளார்.
விராட் கோலி தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணிலும், இலங்கை மண்ணிலும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் வென்றுள்ளது. SENA நாடுகள் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற ஒரே ஆசிய கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.
2. டெஸ்ட் போட்டியில் DRAW என்பது குறைந்துள்ளது..
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த மாற்றம் என மற்றொன்றை கூற வேண்டுமானால், அது வெற்றி அல்லது தோல்வி இரண்டுதான் வேண்டும், சமன் என்ற ஒருமனநிலைக்கு செல்ல கூடாது என்பதுதான். களத்தில் பல அதிரடியான முடிவுகளாலும், பவுலர்களிடம் உத்வேகத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் விராட் கோலி இதை செய்துகாட்டியுள்ளார்.
அதனால்தான் சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு தொடரை கூட சமன் செய்யவோ, இழக்கவோ செய்யவில்லை. சொந்த மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியதால்தான், விராட் கோலி தலைமையிலான அணியால் வெளிநாடுகளில் வெற்றியைத்தேடி முன்னேற முடிந்தது.
ஒரு காலத்தில் வெளிநாடுகளுக்கு டெஸ்ட் தொடர் விளையாடினால், விடிந்து பார்க்கும்போது இந்திய அணி ஆல் அவுட்டாகியிருக்கும் என்ற நிலையை மாற்றி, எதிரணிகளை கூட ஆல் அவுட் செய்ய முடியும் என்ற மாற்றத்தை கொண்டுவந்தவர் விராட் கோலி. அதனால்தான் அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் 4வது உலக டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். ஒருவேளை அவர் தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டிருந்தால், முதலிடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருந்திருக்கும்.
3. டெஸ்ட் கேப்டனாக பேட்டிங்கிலும் வழிநடத்தியது..
ஒரு டெஸ்ட் கேப்டன் அணியை எப்படி பேட்டிங்கிலும் முன் நின்று வழிநடத்த வேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணம் என்றால் அது விராட் கோலிதான். காரணம், அவர் ஒரு டெஸ்ட் கேப்டனாக அதிக இரட்டை சதங்கள் (7) அடித்த வீரராகவும், அதிக ரன்களை குவித்த டெஸ்ட் கேப்டனாகவும் கோலி ஜொலிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த ஒரே வீரர் விராட் கோலி மட்டும்தான்.
நிறைய பேட்டர்கள் கேப்டன்சி பொறுப்பேற்ற பிறகு அழுத்தம் காரணமாக சரியான நம்பர்களை எடுத்துவர முடியாமல் சொதப்பி உள்ளனர். ஆனால் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் சிறந்த நம்பர்களை வெளிக்கொண்டு வந்தார். ஒட்டுமொத்தமாக கோலி டெஸ்ட் கேப்டனாக 20 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடித்தார். 54.80 சராசரியுடன் 5864 ரன்கள் எடுத்தார். அதில் 7 இரட்டை சதங்களும் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்தை தவிர கேப்டனாக தான் விளையாடிய அனைத்து நாடுகளிலும் விராட் கோலி சதமடித்துள்ளார். அணியை கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டன்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு விராட் கோலியே தலைசிறந்த உதாரணம்.
4. பவுலர்களின் கேப்டன்..
விராட் கோலி எப்போதும் பவுலர்களின் கேப்டனாக இருந்துள்ளார், அதன் காரணமாகவே சிறந்த வேகப்பந்துவீச்சு யூனிட்டை இந்தியா தற்போது கொண்டுள்ளது. விராட் கோலியின் கீழ் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவரது தலைமையின் கீழ், வெளிநாடுகளில் இந்தியா சாத்தியமான 35 போட்டிகளில் 22 முறை 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது.
1990 முதல், கோலியைத் தவிர வேறு எந்த இந்திய அணியும் 30-க்கும் குறைவான பந்துவீச்சு சராசரியையும், 60க்கும் குறைவான பந்துவீச்சு வீதத்தையும் கொண்டிருக்கவில்லை. கோலியின் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு 52 பந்துகளிலும் விக்கெட்டை வீழ்த்தினர், ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். ஒப்பீட்டு வகையில், ரிக்கி பாண்டிங்கின் கீழ் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சராசரியாக 29.9 மற்றும் 58 பந்துகளுக்கு ஒரு முறை விக்கெட்டை வீழ்த்தினர்.
கோலியின் கீழ் ஆறு பந்துவீச்சாளர்கள் 100 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர், அஸ்வின் 55 போட்டிகளில் 293 ரன்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கிரேம் ஸ்மித்தின் கீழ் டேல் ஸ்டெய்ன் 347 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஒயிட் பால் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எக்காலத்திற்கும் சிறந்த இந்திய டெஸ்ட் கேப்டன் மற்றும் தலைசிறந்த உலக டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலி மட்டும்தான்.