உலகக் கோப்பை அணியில் 3 இடது கை ஸ்பின்னர்கள்... இந்தியா தவறியது எங்கே?

இந்திய அணிக்கு இருக்கும் பல பிரச்சனைகளுள் மற்றொன்று இந்திய அணியின் பௌலர்கள் யாரும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள் அல்ல.
India squad for world cup
India squad for world cupPTI
Published on

இந்திய அணியின் உலகக் கோப்பை ஸ்குவாட் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு கருத்துகள் பரவத் தொடங்கியிருக்கின்றன. வழக்கம்போல் இந்திய அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று இடது கை ஸ்பின்னர்கள் மூன்று பேர் இடம்பெற்றிருப்பது. ஆஃப் ஸ்பின்னர்களோ, லெக் ஸ்பின்னர்களோ இல்லாத நிலையில் மூன்று இடது கை ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் இந்த விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான முதல் கட்ட இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இன்று வெளியிட்டார்.

இந்தியாவின் உலகக் கோப்பை ஸ்குவாட்:

பேட்ஸ்மேன்கள்:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்

ரோஹித் ஷர்மா | சுப்மன் கில்
ரோஹித் ஷர்மா | சுப்மன் கில்

விக்கெட் கீப்பர்கள்:

கேஎல் ராகுல், இஷன் கிஷன்

ஆல்ரவுண்டர்கள்:

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர்

வேகப்பந்துவீச்சாளர்கள்:

ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

ஸ்பின்னர்கள்

குல்தீப் யாதவ்

இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் என மூன்று இடது கை ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற முன்னணி ஸ்பின்னர்கள் இருக்கும்போதும்கூட 3 இடது கை ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜடேஜா, அக்‌ஷர் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள் என்பதால் பலரும் அக்‌ஷரின் தேர்வை விமர்சித்துவருகிறார்கள். ஆனால் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள் என்பதுதான் இந்தத் தேர்வுக்குக் காரணம் கூட.

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு இருந்த போட்டியைப் போல் மற்ற இடங்களுக்குப் பெரிய போட்டி இல்லை. அதிலும் குறிப்பாக ஆல் ரவுண்டர் ஸ்பாட்டுக்கு. ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருவரையும் தவிர இந்திய அணியில் ஆல் ரவுண்டர்கள் யாரும் இல்லை. இவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு பேக் அப் நிச்சயம் தேவைப்படும். அந்த பேக் அப் வீரராக யாரைத் தேர்வு செய்ய முடியும்? வேறு எந்த வீரரும் இல்லாத காரணத்தால் அந்த இடத்துக்கு அக்‌ஷர் படேலை தேர்வு செய்திருக்கிறது இந்திய அணி.

ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்குத் திரும்பியதை அசைபோட்டால் இதன் காரணம் புரிந்துவிடும். 2017 சாம்பியன்ஸ் டிராபி சொதப்பலுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார் ஜடேஜா. சஹால், குல்தீப் இருவரும் அணியின் முழு நேர ஸ்பின்னர்கள் ஆனார்கள். ஆனால் 2018 ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். பிளேயிங் லெவனில் அவரது இடத்தை நிரப்ப வேறு ஆல் ரவுண்டர்கள் யாரும் இல்லாததால், வேறு வழியின்று ஜடேஜாவை மீண்டும் அணியில் சேர்த்தது இந்திய அணி நிர்வாகம். அதுதான் மிகப் பெரிய பிரச்சனை. அப்போது போல் இப்போதும் ஆல் ரவுண்டர் ஸ்பாட்டுக்கு பஞ்சம்.

இந்திய அணிக்கு இருக்கும் பல பிரச்சனைகளுள் மற்றொன்று இந்திய அணியின் பௌலர்கள் யாரும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள் அல்ல. அதனால் இந்தியாவின் டெய்ல் மிக நீண்டதாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அது இந்திய அணிக்கு மிகப் பெரிய பிரச்சனையாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அணிக்குமே 'பேட்டிங் டெப்த்' தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் நம்பர் 9 வரை நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இந்திய அணி அதன் காரணமாக ஷர்துல் தாக்கூரை லெவனில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதுவும் இன்னொரு ஸ்பின்னருக்கான வாய்ப்பை தடுக்கிறது.

இப்படி ஆல் ரவுண்ட் ஆப்ஷன்கள் அதிகம் இல்லாதது, பௌலர்கள் நன்றாக பேட்டிங் செய்ய முடியாதது என பல காரணங்களால் அக்‌ஷர் படேலை தேர்வு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்திய அணி. அந்த இடத்துக்கு அஷ்வினை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால் அஷ்வினை விட அக்‌ஷர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதும், இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இல்லாத அணிக்கு அவர் அந்த ஆப்ஷனும் கொடுக்கிறார் என்பதும் அக்‌ஷருக்கு சாதகமான அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com