பாபர் அசாம் தலைமயிலான க்ரீன் அணி, முதலிரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்று சிறப்பாகவே தொடங்கியிருந்தாலும், அடுத்து மோதிய இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான 4 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து மோசமான ஒரு இடத்திற்கு சென்றது.
6 போட்டிகளில் 4 போட்டியில் தோல்விபெற்றிருந்த பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் ஒரு போட்டியில் நேற்று வங்கதேசத்தை எதிர்கொண்டது.
முதலில் பந்துவீசிய பாகிஸ்தான் அணி, ஷாஹீன் அஃப்ரிடி, வாசிம் ஜூனியர் மற்றும் ஹாரிஸ் ராஃப் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலால் வங்கதேசத்தை 204 ரன்களில் சுருட்டியது. 205 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா மற்றும் ஃபகர் ஷமான் இருவரும் முதல் விக்கெட்டுக்கே 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்தனர்.
அப்துல்லா 68 ரன்களும், ஃபகர் ஷமான் 81 ரன்களும் அடிக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்து அசத்தியது பாகிஸ்தான் அணி.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருக்கும் பாகிஸ்தான், அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலக்கை 32.3 ஓவரிலேயே முடித்திருக்கும் பாகிஸ்தான் அணி, 6 ரன்ரேட்டுக்கு மேல் அடித்தும், 105 பந்துகளை வெளியில் வைத்தும் முடித்திருப்பதால், நல்ல NRR-ஐ பெற்று ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் மீதமிருக்கும் போட்டியிலும் சிறப்பான வெற்றியை பெறும் பட்சத்தில், அரையிறுதிக்கான வாய்ப்பை வலுவாக தக்கவைக்கும் பாகிஸ்தான் அணி. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை பார்க்கலாம்.
*மீதமிருக்கும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நல்ல ரன்கள் வித்தியாசத்தில் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் முடிக்க வேண்டும்.
*இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, நியூசிலாந்து தோல்வியை சந்திக்க வேண்டும்.
* ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தோற்க வேண்டும்.
* ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் தோற்க வேண்டும்.
* இலங்கை அணி ஒரு போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும்.
இதெல்லாம் நடந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.