உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுடன் மோத தயாரான ஆஸ்திரேலியா... ஆஸி.யின் பலம் பலவீனம் என்ன?
ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னருடன், மிட்செல் மார்ஷ் களமிறங்குகிறார். பேட்டர்கள் முதல் பத்து ஓவர்களில் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால், நடுவரிசையில் இன்னிங்ஸை நேர்த்தியாக நகர்த்திச் செல்ல ஸ்டீவ் சுமித், மார்னஸ் லபுஷேன் உள்ளனர்.
அதன்பிறகு மேக்ஸ்வேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், இவர்களை தொடர்ந்து அலெக்ஸ் கேரியும் அதிரடிக்கு உள்ளார். இறுதிக் கட்டத்தில் பேட் கம்மின்ஸூம் பேட்டை சுழற்றுவார் என்பதால் பெரிய பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது ஆஸி அணி. அதாவது வார்னரும், மிட்செல் மார்ஷூம் பெரிய இன்னிங்சை விளையாடி விட்டால் ஆட்டம் முடிந்துவிட்டது என்றே முடிவு செய்து கொள்ளலாம்.
பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோரின் வேகமும், அனுபவமும் அணிக்கு பெரும் பலம். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் யார்க்கரில் உள்பக்க ஸ்விங் மூலம் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி தனது பார்மை நிரூபித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இப்படி பலமான அணியாக இருந்தாலும் சோபிக்கும்படியான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
அதுவும் இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், ஆடம் ஷம்பா மட்டுமே அங்கு உள்ளார். அவரும் கடந்த தொடர்களில் ரன்களை வாரி வழங்கியதை அணி கவனத்தில் கொள்ளாமல் இல்லை. இதனால் அணியின் முழு கவனமும் மேக்ஸ்வெல் பக்கம் திரும்பியுள்ளது.
மேக்ஸ்வெல்லும் முழுமையாக அழுத்தம் கொடுப்பார் என கருதமுடியாது. அஷ்டன் அகார் (ASTON AGAR) இருந்திருந்தால் சுழற்பந்து வீச்சில் பலம் சேர்த்திருப்பார். காயம் காரணமாக அவர் விலகியதை அடுத்து மாற்று வீரராக லபுஷேன் சேர்க்கப்பட்டார். அந்த வகையில் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இருப்பது பலவீனமாக பார்க்கப்படுகிறது.