“யாரு கோட்டையில வந்து யாரு கொடி நாட்டுறது” - ஆஸி.க்கே பயம் காட்டி தெ.ஆப்ரிக்கா சம்பவம் செய்த நாள்!

தொட்டதெல்லாம் துலங்கும் என்று சொல்வார்களே அப்படித்தான் ரிக்கி பாண்டிங் ‘கிங்’ ஆக கிரிக்கெட் உலகில் வலம் வந்த காலம். ஆனால் அன்று நடந்ததென்னவோ வேறு கதை.. திரைக்கதை சற்றே திருத்தி எழுதப்பட்ட நாள்..
aus vs sa
aus vs sapt web
Published on

கிரிக்கெட் உலகில் மறக்கமுடியாத போட்டிகள் என்று சில போட்டிகள்தான் அதன் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அப்படியான ஒரு போட்டிதான் இதேநாளில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி. இன்றும் அந்தப் போட்டியை நினைத்தால் சிலிர்த்துபோகும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய போட்டி அது.

கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்த ஆஸ்திரேலியா!

‘அன்னைக்கு அவன அடிச்சுக்க ஆளே கிடையாது’. ஆஸ்திரேலிய அணியை கண்டாலே எல்லா அணிக்கு ஒருவித பயம் இருக்கும், உதறல் எடுக்கும். அந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான அணியை கட்டமைத்து, வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வந்தார் கேப்டன் ரிக்கி பாண்டிங். தொட்டதெல்லாம் துலங்கும் என்று சொல்வார்களே அப்படித்தான் ரிக்கி பாண்டிங் ‘கிங்’ ஆக கிரிக்கெட் உலகில் வலம் வந்த காலம். பிரெட் லீ போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். பேட்டிங் சொல்லவே வேண்டாம். ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் என எல்லோருமே தடம் பதித்துக் கொண்டிருந்தார்கள். 2003 உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ரிக்கி பாண்டிங் படை கோப்பையை தட்டித்தூக்கியது. இப்படியான ஒரு அணி தான் 2006 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றது. தென்னாப்ரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன்பாக கிட்டதட்ட தோல்வி என்பதே இல்லை என்ற அளவிற்கு அனைத்து ஒருநாள் தொடர்களையும் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. ஸ்டீவ் வாஹ் தொடக்கி வைத்த வெற்றிப் பயணத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார் ரிக்கி பாண்டிங்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள்! பரபரப்பில் கடைசிப்போட்டி!

முதலில் ஒரே ஒரு டி20 போட்டி நடைபெற்றது. அதனை தென்னாப்ரிக்கா வென்றது. இதன் காரணமாக தோல்வியுடனே தென்னாபிரிக்க பயணத்தை தொடங்கியது ஆஸ்திரேலியா. அத்துடன், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாரிப்பா வெற்றி பெற, பின்னர் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது ஆஸ்திரேலியா. அதனால், தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடித்தார்.

தெறிக்கவிட்ட ரிக்கி பாண்டிங் - இமாலய ரன்களை குவித்த ஆஸ்திரேலியா!

தொடக்க வீரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் கட்டிச் இருவரும் அற்புதமாக விளையாடி அரைசதம் அடித்தனர். அதிரடியாக விளையாடிய கில்கிறிஸ்ட் 55 ரன்களில் ஆட்டமிழக்க, களத்திற்கு வந்தார் ரிக்கி பாண்டிங். பந்துகளை வீணடிக்காமல் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துக் கொண்டே வந்தார் பாண்டிங். காட்டிச் 79 ரன்களில் ஆட்டமிழக்க பாண்டிங் - மைக்கேல் ஹசி கூட்டணி அமைந்தது. இருவரும் சேர்ந்து தென்னாப்ரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடக்கத்தில் பந்துக்கு ஏற்றவாறு ரன்கள் சமமாக இருந்தாலும் போகப்போக நிலைமையே மாறியது. சிக்ஸர்களாக பறக்கவிட்டார் ரிக்கி பாண்டிங். சதம் விளாசிய பின் அவரது அதிரடி இன்னும் வேகமெடுத்தது. பந்துகள் ஒவ்வொன்றும் எல்லைக்கோட்டைத் தொடுவதே குறி என பறந்தன. அவருக்கு இணையாக ஹசியும் விளாசி தள்ளினார். ஹசி 51 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டர்களுடன் 81 ரன்களிலும், ரிக்கி பாண்டிங் 9 சிக்ஸர், 13 பவுண்டர்களுடன் 164 ரன்களுடனும் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் 13 பந்துகளை மட்டுமே சந்தித்த ஆண்ட்ரு சைமன்ஸ் 27 ரன்கள் குவித்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 434 ரன்கள் குவித்து அனைத்து ரசிகர்களின் பார்வையை உயர வைத்திருந்தது. ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என சாதனையை படைத்திருந்தது.

435 ரன்கள் இலக்கு. இந்த இலக்கை பார்த்த பிறகும் எந்தவொரு கிரிக்கெட் ரசிகரும் என்ன நினைத்திருப்பார்கள்? நிச்சயம் ஆஸ்திரேலியாவே இந்தப் போட்டியில் வெல்லும். 400 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்வது என்பதெல்லாம் நடக்காத காரியம். ஏனென்றால் அதற்கு முன்பு வரை செய்த மிகப்பெரிய சேஸிங் என்பதே 332 ரன்கள் தான். அப்படியென்றால், தென்னாப்ரிக்கா போராடி 350 ரன்கள் கூட அடிக்கலாம், 435 ரன்கள் என்பது கற்பனை கூட செய்ய முடியாதது. கோப்பையை ஆஸ்திரேலியா பேரில் எழுதுங்கள் என்றே அனைத்து ரசிகர்களும் நினைத்திருப்பார்கள். ஆனால், அன்று நடந்த சம்பவமே வேறு.

கதிகலங்க வைத்த கேப்டன் ஸ்மித் - கிப்ஸ் ஆட்டம்!

தோற்றாலும் பரவாயில்லை முடிந்தவரை போராடி பார்க்கலாம் என்ற நினைப்பில்தான் தென்னாப்ரிக்க வீரர்கள் களமிறங்கி இருப்பார்கள். தொடக்கம் முதலே அவர்களின் போராட்ட குணம் வெளிப்பட்டது. இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் டிப்பென்னர் ஆட்டமிழந்த போதும் மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் கிரீம் ஸ்மித், கிப்ஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு படம் காட்டினார். ஆடுகளம் முழுவதும் அதிரடி ஆக்‌ஷன் சீன்களுக்கு பஞ்சமில்லை. ஸ்மித் 33 பந்துகளிலும், கிப்ஸ் 46 பந்துகளிலும் அரைசதம் விளாசினர். இன்று நாம் பார்க்கும் டி20 போட்டி போல் அந்த ஆட்டம் இருந்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு மட்டும் 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்மித் 55 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 90 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது தென்னாப்ரிக்க அணி 22.1 ஓவரிலேயே 190 ரன்கள் குவித்திருந்தது. பாதி கிணறை தாண்டி இருந்தது. ஆனால், ஆட்டம் இன்னும் இருக்கிறதே.. ஒரு புறம் கிப்ஸ் அதிரடியாக விளையாடினாலும் டிவில்லியர்ஸ் 14 (20), ஜாக் காலிஸ் 20 (21) என வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். கிப்ஸ் 111 பந்துகளை சந்தித்து 7 சிக்ஸர், 21 பவுண்டரிகள் என 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கிப்ஸ் ஆட்டமிழக்கும் போது தென்னாப்ரிக்க அணி 299 ரன்கள் குவித்து இருந்தது. மேற்கொண்டு அந்த அணிக்கு 136 ரன்கள் தேவைப்பட்டது.

முக்கிய நேரத்தில் கைக்கொடுக்காத காலிஸ், டிவில்லியர்ஸ்!!

ஜாக் காலிஸும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜஸ்டின் கெம்பும் 13 ரன்னில் நடையைக் கட்டினார். 355 ரன்களுக்குள் தென்னாப்ரிக்கா 6 விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. 8 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில்தான் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் உடன் ஜோடி சேர்ந்தார் ஜான் வண்டர் வாத். 35 ரன்கள் எடுத்த நிலையில் வாண்டரும் 47 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் 18 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 35 ரன்களை எடுத்ததால் ஆட்டம் அப்போது தென்னாப்ரிக்கா வசமே இருந்தது. அப்பொழுது 21 பந்துகளில் தென்னாப்ரிக்காவிற்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. எட்டக்கூடிய இலக்குதான். 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 48 ஆவது ஓவரில் 17 ரன்களை எடுத்தது தென்னாப்ரிக்கா. இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் கிட்டதட்ட வெற்றி தென்னாப்ரிக்கா வசம் இருந்தது. ஆனால், 49 ஆவது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது ஒரு விக்கெட்டும் பறிபோனது.

6 பந்தில் 7 ரன்கள் தேவை.. திக் திக் கடைசி ஓவர்!

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே பவுச்சர் ஒரு சிங்கிள் எடுத்தார். அந்த ஓவரை வீசுவதே ‘வேகப்பந்து கிங்’ பிரெட் லீ. அதனால் கொஞ்சம் பதற்றம் தொற்றிக் கொண்டது. உச்சக்கட்ட பரபரப்பில் கடைசி ஓவர் இருந்தது. மைதானத்தில் அனைவரும் இருக்கையில் நுனிக்கே வந்துவிட்டனர். இரண்டாவது பந்தீல் ஆண்ட்ருவ் ஹால் பவுண்டரி விளாச சற்றே நிம்மதி அடைந்தனர் தென்னாரிப்ப ரசிகர்கள். ஆனால், அது சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்துவிட்டார். 3 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரே ஒரு விக்கெட் தான் கைவசம் இருந்தது. அடுத்து களத்திற்கு வந்ததோ நிடினி. அவர் ஒரு பவுலர். அவர் என்ன செய்யப்போகிறார்? அவர் விக்கெட்டையும் அட்லீ சாய்த்துவிடுவாரே என பீதி தென்னாப்ரிக்க ரசிகர்கள் மனதில் ரீங்காரமிட்டது. ஆனால், எப்படி அவர் ஒரு சிங்கிள் எடுத்து கொடுத்து ஆட்டத்திற்கு உயிர் கொடுத்தார். ஸ்கோர் தற்போது சமநிலைக்கு வந்தது. கைவசம் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவை. எல்லோரது கண்களும் பவுச்சர் மீதுதான் இருந்தது. என்ன ஆகப்போகிறது.. தென்னாப்ரிக்கா வரலாறு படைக்குமா அல்லது வரலாற்றுப் பாடமாகுமா என்பதே அனைவரது எண்ணமும். பந்து வீசப்பட்டது, சூப்பராக ஒரு பவுண்டரி அடித்து எல்லோரது நெஞ்சிலும் பாலை வார்த்தார் பவுச்சர். ஏனென்றால் தென்னாப்ரிக்காவின் போராட்ட குணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அவர்கள் பக்கம் சாய்த்தது. எப்படியாவது தென்னாப்ரிக்கா வெற்றி பெற வேண்டும் என நினைக்கவைத்துவிட்டது. இறுதியில் அதுவும் நடந்தது. இமாலய இலக்கை அடைந்து தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க்கா.

434 ரன்கள் என்ற உச்சபட்ச ரன்களை குவித்த ஆஸ்திரேலியாவின் சாதனை அடுத்த 3 மணி நேரங்களில் தகர்க்கப்பட்டது.

எந்தவொரு சாதனையும் தகர்க்க முடியாதது இல்லை. ஆனால், தென்னாப்ரிக்கா நிகழ்த்தி காட்டி இருக்கும் சாதனை என்று கிரிக்கெட் உலகில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒன்றுதான்.

கிரிக்கெட் உலகில் சில போட்டிகளின் முக்கிய தருணங்களை மீண்டும் ஒருமுறை வீடியோ க்ளிப்பில் பார்க்கும் போது புல்லரிப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக 2011 உலகக்கோப்பையில் தோனி சிக்ஸர் விளாசி கோப்பையை உறுதி செய்ததும், கவாஸ்கரின் அற்புதமான கமெண்ட்ரியும். அப்படியான ஒரு வீடியோ க்ளிப் தான் கடைசி பந்தில் பவுச்சர் பவுண்டி விளாசி வெற்றியை உறுதி செய்ததும் தென்னாப்ரிக்க வீரர்கள் பாய்ந்து மைதானத்தை நோக்கி வந்ததும் உள்ள இந்த வீடியோ க்ளிப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com