நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் கோப்பை வெல்வதற்கான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது. தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டாலும் தோல்வியிலிருந்து மீண்டுவந்த ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பையையும் தட்டிச்சென்றது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டிக்கு பிறகு பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், “சிறந்த அணி உலகக் கோப்பையை வென்றது என்று சொன்னால் என்னால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அணி தான் காகிதத்தில் சிறந்த அணி” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருந்தார்.
அவருடைய அந்த கருத்தை கமண்டேட்டர் மிட்செல் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கின்றன, காகிதத்தில் அல்ல என்பதை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃபுக்கு யாராவது நினைவூட்டுங்கள்” என பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இந்த பதிவை பகிர்ந்திருக்கும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முகமது கைஃப் கருத்துக்கு பதிலளித்து பதிவுசெய்துள்ளார்.
முகமது கைஃப் எனக்கு பிடித்த ஒருவர் என பேசியிருக்கும் வார்னர், “எனக்கு MK பிடிக்கும், காகிதத்தில் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல. அந்த நாளின் முடிவில் எது முக்கியமானதாக இருக்கிறதோ அதை நீங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் அதை ஃபைனல் என்று சொல்கிறார்கள். அந்த நாளிற்காக தான் எல்லாம் நடக்கிறது. அது எந்த வழியிலும் செல்லலாம், அது தான் விளையாட்டு. 2027 நோக்கியும் நாங்கள் வருகிறோம்” என X-ல் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் முன்னாள் உலகக் கோப்பை வென்ற கேப்டனுமான ரிக்கி பாண்டிங், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிட்ச்களை எவ்வாறு கையாள்வது என்பதில் இந்தியா பின்வாங்கியது என்பதை எடுத்துக்காட்டினார். அதுகுறித்து அவர் பேசுகையில், “இன்று மிகவும் சாதாரண துணைக் கண்ட ஆடுகளமாக இருந்தது. ஒரு விக்கெட் தயாரிப்பு என்பது இந்தியாவுக்கு மேலும் நியாயமானதாக இருந்திருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்லாமல் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர்.