இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து வீரர்கள் ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வருகின்றனர். ஜனவரி 25ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதிவரை நடக்கவிருக்கும் போட்டிகளானது ஹைதராபாத், ராஜ்கோட், விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் தரம்சாலா மைதானங்களில் நடத்தப்படவிருக்கிறது.
இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையேயான தொடர் என்பதால் பல முன்னாள் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இப்போதே வார்த்தை போரில் ஈடுபட்டுவருகின்றனர். இங்கிலாந்தின் “பாஸ்பால்” அட்டாக்கை இந்தியாவால் சமாளிக்க முடியாது என நாசர் ஹுசைனும், பாஸ்பாலுக்கு கவுண்டர் அட்டாக் கொடுக்க இந்தியாவிடம் “விராட்பால்” இருக்கிறது என சுனில் கவாஸ்கரும், ஜடேஜா ஒன்றும் ஷேன் வார்னோ அல்லது முரளிதரனோ இல்லை பயப்பட என கெவின் பீட்டர்சனும், இங்கிலாந்து அணி இந்திய ஸ்பின்னர்களிடம் ஒன்றும் செய்யமுடியாது என ஹர்பஜன் சிங்கும் தொடர்ச்சியாக தங்களுடைய அணிகளுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் என்பதால், அனைத்து தரப்பினரின் கவனத்தையும் இந்தத்தொடர் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் விராட் கோலி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசிய விராட்கோலி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தன்னுடைய முதன்மையான விஷயமாக இருக்கும் போதும், சில தனிப்பட்ட சூழ்நிலைகள் அவருடைய இருப்பை கோருவதால் வேறு வழியில்லாமல் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் “பிசிசிஐ அவரது முடிவை மதிக்கிறது என்றும், வாரியம் மற்றும் அணி நிர்வாகம் நட்சத்திர பேட்டருக்கு தங்களது ஆதரவை எப்போதும் வழங்குகிறது என தெரிவித்திருக்கும் பிசிசிஐ, இந்த நேரத்தில் விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளித்து அவரது தனிப்பட்ட காரணங்களை ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் ஊகிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக” தெரிவித்துள்ளது.
விராட் கோலி விலகிய நிலையில் இன்னும் மாற்றுவீரர் அறிவிக்கப்படாத நிலையில், ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுவரும் மூத்த வீரர் புஜாரா அல்லது திலக் வர்மா, இந்தியா ஏ அணியில் கலக்கி வரும் ரஜத் பட்டிதார் போன்ற வீரர்களில் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வெளியிலிருந்து யாரையும் எடுக்காமல் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.