உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக தகவல் வெளியானது. எனினும், டி20 எதிர்காலத்தை பொறுத்தவரையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அவர்களாகவே முடிவை எடுத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தரப்பு தெரிவித்தது.
இதற்கிடையே தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அதன் சொந்த மண்ணிலேயே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சமன்செய்து அசத்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. நாளை முதல் தொடங்க இருக்கும் இந்த தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க உள்ளார். இந்த நிலையில், நாளை நடைபெறும் முதல் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக நாளை நடைபெறும் முதல் போட்டியில் விளையாட மாட்டார். எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் அவர் விளையாடுவார். ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி நாளை (ஜன.11) மொகாலியில் நடைபெற உள்ளது.
டி20 தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , அவேஷ் கான், முகேஷ் குமார்
இதையும் படிக்க: தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த டெல்லி பொறியாளர்!