இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். ஆனால் அவரின் விலகலுக்கான காரணத்தை பிசிசிஐ பகிரவில்லை. மாறாக யாரும் அவர் விலகியதற்கான காரணத்தை ஊகிக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் பிசிசிஐ முன்வைத்தது.
ஆனால் அந்தநேரத்தில் ராமர் கோயில் திறப்பு, இந்தியாவின் வரலாற்று டெஸ்ட் தோல்வி, பொதுவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி விராட் கோலி மனிதர் என தொடர்ந்து விராட் கோலியின் இருப்பு கேள்விக்குறியாகவும், எங்கேதான் இருக்கிறார் விராட் கோலி என்ற கேள்வியும் அதிகமாக எழுந்தது.
தொடர்ந்து விராட் கோலிக்கு என்னாச்சு, கோலி அணியுடனும் இல்லை, வெளியிலும் இல்லை எங்குதான் இருக்கிறார் என்று தொடங்கிய ஆன்லைன் ஊகங்கள், ஒரு கட்டத்தில் விராட் கோலி இந்தியாவிலேயே இல்லை, அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற புரளியை கிளப்பியது.
இதற்கிடையில் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி இருவரும் தங்களுடைய இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்க்கின்றனர் என்று கோலியின் நண்பரான டி வில்லியர்ஸ் யூ-டியூப் வீடியோவில் வெளிப்படுத்தினார். ஆனாலும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் மௌனம் காத்த நிலையில், டி வில்லியர்ஸ் அவர் பதிவிட்ட வீடியோவை டெலிட் செய்துவிட்டு, கோலி குறித்த பொய்தகவலை பகிர்ந்துவிட்டேன் என வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கு எப்படியும் திரும்பிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, அதற்கு பிறகான 13 வருட டெஸ்ட் கரியரில் ஒருமுறை கூட முழு டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகியதில்லை.
ஃபிட்னஸுக்கு பெயர்போன விராட் கோலி, இதுவரை காயம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ ஒருமுறை கூட டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதே இல்லை. 2021 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போதும் கூட முதல் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி தன்னுடைய முதல் குழந்தையின் வருகைக்காக இந்தியா திரும்பினார். மற்றபடி ஓய்விற்காக மட்டுமே சில போட்டிகளில் விலகியுள்ளாரே தவிர ஒரு முழு தொடரிலிருந்தும் விராட் விலகியதில்லை.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகியிருக்கும் கோலிக்கு என்னாச்சு என்ற கேள்வியும், அக்கறையும் எழுகிறது. கோலி சென்றதற்கான காரணத்தை இந்திய அணியும், பிசிசிஐ-ம், கோலி மற்றும் அனுஷ்கா தரப்பு மூன்று பேருமே மறைத்திருக்கும் நிலையில் குழப்பம் ஏற்படுகிறது.
இதுபோன்ற சூழலில் எப்போதும் உங்களுடன் இருப்போம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் காயம் காரணமாக சிகிச்சைக்கு சென்றிருந்த ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மீதமிருக்கும் தொடரிலிருந்து விலகியுள்ளார். கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி 3 போட்டிகளுக்கும் கிடைக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கேஎல் ராகுல்*, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.