இந்தியாவில் 50 ஓவர் 13-வது ஆடவர் உலகக்கோப்பைக்கான போட்டிகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. சென்னையில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில், ’உலகக் கோப்பை டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளைக் கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை பகிர்ந்து, “உங்களின் குறுஞ்செய்திக்கு பதில் வரவில்லை என்றால் என்னிடம் உதவி கேட்காதீர்கள்” என்று விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
இதையும் படிக்க: உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா: சச்சின் சொன்ன நெகிழ்ச்சி கருத்து!