இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அணியில் இருந்த விராட் கோலி, திடீரென தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முதலிரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மற்றவர்களும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிசிசிஐ, விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தது.
ஆனால் முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி படுதோல்வியை சந்தித்த பிறகு, விராட் கோலியின் இருப்பை இந்திய ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாத நேரத்தில் பல வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவியது. ஒருகட்டத்தில் விராட் கோலியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் கோலியின் உறவினரால் மறுக்கப்பட்டது.
பின்னர் விராட் கோலியின் நெருங்கிய நண்பரான ஏபி டி வில்லியர்ஸ், யூ-டியூப் தளத்தில் பேசிய நேரலை வீடியோ ஒன்றில் ”விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் தங்களுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்கவிருப்பதாகவும், அதனால் தான் கோலி குடும்பத்துடன் இருப்பதாகவும்” தெரிவித்தார். டி வில்லியர்ஸ் கூறிய பிறகும் கோலி மற்றும் அனுஷ்கா தரப்பு அதை உறுதிசெய்யாத நிலையில், மீண்டும் ”தான் தவறிழைத்து விட்டதாகவும் விராட் கோலிக்கு என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை என்றும்” டி வில்லியர்ஸ் மன்னிப்பு கேட்டு பழைய வீடியோவை டெலிட் செய்தார்.
இந்நிலையில் தான் தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும், ”தங்களுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்றதாகவும், எல்லோருடைய ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துக்களை விரும்புவதாகவும்” பொதுவெளியில் தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விராட் கோலி, “அன்பினால் நிறைந்த எங்கள் இதயங்களுடன் உங்கள் எல்லோருக்கும் இதை தெரிவிக்க விரும்புகிறோம், பிப்ரவரி 15-ம் தேதி எங்களுடைய ஆண் குழந்தை அகாயையும், வாமிகாவின் குட்டி சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசீர்வாதங்களையும், நல்வாழ்த்துக்களையும் பெற நாங்கள் விரும்புகிறோம். உடன் எங்கள் தனியுரிமையை தயவுசெய்து மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். அன்பும் நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா” என்று பதிவிட்டுள்ளனர்.
அக்காய் என்பது இந்தி வார்த்தை. இந்த வார்த்தையின் மூலச்சொல் துருக்கி மொழியில் இருந்து வந்தது. இதற்கு ஜொலிக்கும் நிலவு (Shining Moon) என்று அர்த்தம். இந்தப் பெயரை ஆண் குழந்தைக்கும் வைக்கலாம், பெண் குழந்தைக்கும் வைக்கலாம். அதாவது, gender-neutral. சமஸ்கிருதத்தில் அக்காய் என்பது உடலும், உருவமும் அற்றவன் என்று அர்த்தம். இந்தப் பெயருக்கு வழிகாட்டுபவன், காப்பன் என்ற அர்த்தமும் சொல்லப்படுகிறது.
விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. வாமிகா என்றா துர்கா தேவி என்று பொருள். சிவனின் இடப்புறம் அமர்ந்தவள் என்று பொருள்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் பரஸ்பரம் தங்களது அன்பை நீண்ட காலமாக வெளிப்படுத்தி வருகின்றது. சிறந்த காதல் தம்பதிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.