2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரின் கடைசி லீக் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணியும் நெதர்லாந்து அணிகயும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கில் மற்றும் ரோஹித் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது. பந்துகள் அனைத்தும் பவுண்டரி லைனுக்கும், அதைத் தாண்டியும் பறந்தது. முதல் பத்து ஓவர்களிலேயே இந்திய அணி 90 ரன்களைக் குவித்தது.
இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கில் 35 பந்துகளில் 51 ரன்களை அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த விராட் 56 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அவுட்டானார். ஆனாலும் பல்வேறு சாதனைகளை படைத்த பின்பே வெளியேறியுள்ளார்.
இன்றைய போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் விராட் தனது 71 ஆவது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார் ரோஹித். 2003 ஆம் ஆண்டு சச்சின் 7 முறை அரைசதம் அடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டில் இச்சாதனையை சமன் செய்தார் ஷாகிப் அல் ஹசன். இந்நிலையில் தற்போது அந்த பட்டியலில் விராட்டும் இணைந்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 594 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 சதம் 5 அரைசதங்கள் அடக்கம்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 128 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 102 விளாசி ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது.