இந்திய அணியில் எப்போதும் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை என்பது நிலையான குறையாகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேடலாகவும் இருந்துவருகிறது. 2021 ஐபிஎல் தொடரில் தனது அபாராமான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர், 10 ஆட்டங்களில் 41.11 சராசரியில் 370 ரன்களுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எல்லோரையும் திகைக்க வைத்தார். அதனால் 2021ம் வருடமே இந்திய அணியின் அறிமுகத்தை பெற்றார்.
ஆனால் அதற்குபிறகு தன்னுடைய ஃபார்மை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியிலும், 2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐயர், 4 அரைசதங்களுடன் 46.25 சராசரியுடன் 370 ரன்கள் குவித்தார். இவருடைய அசத்தலான பேட்டிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கு பிறகு லண்டனில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார்.
லங்காஷயர் கிரிக்கெட் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவில் திஸ் ஆர் தட் கேள்விகள் வெங்கடேஷ் ஐயரிடம் கேட்கப்பட்டன. அதில் கடைசியாக தோனியா அல்லது சச்சினா என்ற கேள்வியின் போது இரண்டு ஜாம்பவான்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பத்தில் அமர்ந்தார். இருப்பினும், ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஐயர் டெண்டுல்கரை விட தோனியைத் தேர்ந்தெடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அந்த கேள்விகளின் போது அவரின் அனைத்து பதில்களுமே குறிப்பிடும்படியாகவே இருந்தது. அதில் அவர், பிலிப் சால்ட்டுக்கு பதிலாக லசித் மலிங்கா, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர் முதலிய சாம்பியன் வீரர்களை புறக்கணித்தார். அதேபோல தோனிக்கு பதிலாக சச்சின் மற்றும் விராட்கோலியை புறக்கணித்தார்.
வெங்கடேஷ் ஐயரின் தோனி தேர்வை பார்த்த ரசிகர்கள் ஃபேன் பாய் பதில் என பதிவிட்டு வருகின்றனர்.