இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களுடன் விளையாடிவருகிறது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெறவிருக்கும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தி கம்பேக் கொடுத்துள்ளார், ஐபிஎல்லில் 156.7கிமீ வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது, அக்டோபார் 6 முதல் அக்டோபர் 12ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில், “அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா (WK), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்” முதலிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
மிஸ்ட்ரி ஸ்பின்னர் என கொண்டாடப்பட்ட வருண் சக்கரவர்த்தி, 2021 டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பிறகு காயம்காரணமாக விலகினார். அதற்குபிறகு அவருக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்த நிலையில், மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பலமுறை 150கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்த மயங்க் யாதவ் தன்னுடைய டி20 அறிமுகத்தை பெறவிருக்கிறார். மற்றபடி ஹர்சித் ரானாவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.