பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷக்கீல் இருவரின் அரைசதத்தின் உதவியால் 270 ரன்களை போர்டில் சேர்த்தது.
271 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிவந்த தென்னாப்பிரிக்கா அணி, விதிமுறை மற்றும் டெக்னாலஜி குழப்பத்தால் சில விக்கெட்டுகளை பறிகொடுத்து நல்ல நிலைமையிலிருந்து ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வீசப்பட்ட முதல் ஓவரில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஷதாப் கான் ஃபீல்டிங் செய்யும் போது தலையில் அடிப்பட்டது. பந்தை தூக்கி த்ரோ செய்தபோது தடுமாறி விழுந்த அவரின் தலை தரையில் பலமாக மோதியது. அப்போது நிலைகுலைந்த அவருக்கு முதலுதவி செய்ய ஸ்டிரெச்சர் வரவழைக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக எழுந்துநின்ற ஷதாப், நடந்தவாறே கிரவுண்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் ஷதாப் கானின் நிலைமையை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் பயிற்சியாளர் அம்பயர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, Concussion மாற்றுவீரர் விதிமுறையின் படி ஷதாப் கானுக்கு பதிலாக உசாமா மிர்ரை களமிறக்க ஒப்புதல் வாங்கியது. அதன்படி உள்ளே வந்த உசாமா மிர் வந்ததும் களத்தில் இருந்த வாண்டர் டஸ்ஸெனை வெளியேற்றி அசத்தினார். மேலும் இறுதிவரை களத்தில் தொல்லையாக இருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் மார்கரமை 91 ரன்களில் வெளியேற்றிய அவர், பாகிஸ்தானை மீண்டும் போட்டிக்குள் கொண்டுவந்தார்.
Substitute விதிமுறை படி வரும் ஒரு மாற்றுவீரரால் எப்படி பந்துவீச முடியும் என பெரும்பாலான ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
சில ரசிகர்கள் அது சாதாரணமாக பயன்படுத்தப்படும் Substitute விதிமுறையில் தான் வீரர்கள் பந்துவீச முடியாது, இது Concussion Substitute விதிமுறை என்பதால் வீரர்கள் பந்தும் பேட்டும் செய்யலாம் என பதிலளித்துவருகின்றனர்.
Concussion Substitute விதிமுறையின் படி ஒரு வீரருக்கு தலையில் அடிப்பட்டாலே, இல்லை நிற்கவே முடியாமல் மூளை அதிர்வு ஏற்பட்டாலே அவருக்கு பதிலாக மாற்றுவீரர் களமிறங்கலாம். இதன் இறுதிமுடிவு கள அம்பயரின் முடிவாகும்.
இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. தென்னாப்ரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது.