ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி அமைதியாக தொடங்கியுள்ளது டி20 உலகக்கோப்பை தொடர். தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. டி20 தொடரில் வங்கதேசத்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய கையோடு உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளது அமெரிக்கா.
இதில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கனடா பவர் ப்ளேவில், நிதானமாக ஆடி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 50 ரன்களை எடுத்திருந்தது. இதன் பின் ஒரு விக்கெட் விழுந்தாலும், நவ்னீத் மற்றும் நிக்கோலஸ் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தனது முதல் உலகக்கோப்பை தொடரில், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நவ்னீத் 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு இணையாக நிக்கோலஸும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தார். வான் சால்விக் வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார் நிக்கோலஸ். மறுபுறம் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நவ்னீத் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். இருந்தபோதும் தனது அதிரடியை விடாத நிக்கோலஸ் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட்களை இழந்து 194 ரன்களைக் குவித்தது.
195 ரன்கள் எனும் இலக்கை எதிர்த்து ஆடிய அமெரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே அமெரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர் எல்.பி.டபிள்யூ ஆகி அதிர்ச்சி அளித்தார். இதற்குப் பின் அணியின் ஸ்கோரை கட்டமைத்தனர் ஆண்ட்ரிஸ் கோஸ் மற்றும் மோனான்க் படேல். அமெரிக்க அணி 6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 41 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. நிதானமாக ஆடிய மோனான்க் படேல் 16 ரன்களில் வெளியேற களத்திற்கு வந்தார் ஆரோன் ஜோன்ஸ். இதற்குப் பின் அணியின் ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. 9 ஆவது ஓவரில் 19 ரன்கள், 10 ஆவது ஓவரில் 14 ரன்கள், 11 ஆவது ஓவரில் 10 ரன்கள், 12 ஆவது ஓவரில் 15 ரன்கள், 13 ஆவது ஓவரில் 20 ரன்கள் என அதிரடி காட்டினர். அதிலும், கோர்டன் வீசிய 14 ஆவது ஓவரில் மட்டும் 33 ரன்களை சேர்த்து அதிரடி காட்டியது ஆண்ட்ரிஸ் கோஸ், ஆரோன் ஜோன்ஸ் ஜோடி.
முடிவில் 17.4 ஓவர்களில் 197 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது அமெரிக்க அணி. அதிரடியில் கலக்கிய ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 10 சிக்சர்களை விளாசி 94 ரன்களை எடுத்து அசத்தினார். இதன்மூலம், கெயிலின் சாதனையை சமன் செய்துள்ளார் ஜோன்ஸ். டி20 உலகக்கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் கெயில் உள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 11 சிக்சர்களை விளாசி இருந்தார். அதேபோல் 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 10 சிக்சர்களை விளாசி இருந்தார். கனடாவிற்கு எதிராக 10 சிக்சர்களை விளாசியதன்மூலம் கெயிலின் இரண்டாவது சாதனையை சமன் செய்துள்ளார் ஜோன்ஸ். ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் ஜோன்ஸ்.