கிரிக்கெட்டில் 3வது வகையான டி20 வந்தபிறகு, சுவாரஸ்யத்துக்கும் பரபரக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பேட்டர்கள் பந்துவீச்சாளர்களை ஒருவழி செய்துவிடுகின்றனர். இதனால், ரசிகர்கள் டி20 கிரிக்கெட்டை, ஒரு பெரிய விருந்தாக நினைத்து கண்டுகளித்து மகிழ்கின்றனர். தற்போது அதேபாணியில் டி10 கிரிக்கெட்டும் சூடுபிடித்து வருவதால், அதிலும் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் டி20, டி10 வடிவ கிரிக்கெட்டால் பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீண்டும் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரே வீரர், அதே சாதனையைச் செய்திருப்பதுதான் வியப்பான விஷயம்.
அமெரிக்காவில் வர்ஜீனியர் பிரீமியர் லீக் டி10 போட்டிகள் நடைபெற்றது. 10 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரில் எஸ்.ஓ.சி.ஏ. அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக இவ்வணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில், குலே ஷேர் மற்றும் பாகிஸ்தான் ஸ்டார் ஆகிய அணிகள் மோதின. கடந்த நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய குலே ஷேர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க: ''சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்'': காவல்துறை
இதில் ஜாஸ்கரன் மல்கோத்ரா என்ற தொடக்க பேட்டர் 31 ரன்களில் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் இந்தப் போட்டியில் மீண்டும் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் எடுத்து சாதனை படைத்தார். போட்டியின் 6வது ஓவரை பிரின்ஸ் கில் வீசினார். அதனை எதிர்கொண்ட மல்கோத்ரா, முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்து வொய்டாக மாறியது. பின்னர் அந்த வொய்டுக்குப் பதிலாக வீசப்பட்ட பந்தையும் சிக்ஸருக்குத் தூக்கினார்.
அடுத்து 3வது பந்தும் வொய்டாக மாறியது. பிறகு அந்த வொய்டுக்குப் பதிலாக வீசப்பட்ட பந்தையும் சிக்ஸருக்குத் தூக்கி அசத்தினார், மல்கோத்ரா. பின்னர், அடுத்து சரியாக வீசப்பட்ட 4 பந்துகளையும் சிக்ஸருக்கு தூக்கி, பவுலர் கில்லுக்கு கிலி ஏற்படுத்தினார், மல்கோத்ரா. இதனால் அந்த ஓவரில் மட்டும் 6, 1wd, 6, 1wd, 6, 6, 6, 6 என 38 ரன்கள் கிடைத்தது. மேலும் இந்தப் போட்டியில் மட்டும் மல்கோத்ரா, 14 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அவர், ஒருவேளை 97 ரன்களில் மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் மிகக் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையில் இடம்பிடித்திருப்பார். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இதையும் படிக்க: காஸா மீது இஸ்ரேல் கொத்து குண்டுகளை வீசியதா? - மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
ஏற்கெனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியிலும் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா, பாபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கௌடி டோகா வீசிய 50ஆவது ஓவரை எதிர்கொண்ட அமெரிக்க அணி வீரர் மல்கோத்ரா, 6 பந்துகளிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டு கெத்து காட்டினார். அந்தப் போட்டியில், மல்கோத்ரா124 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 173 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அமெரிக்க அணிக்காக ஒருவர் சதமடித்ததும் அதுதான் முதல்முறை. தவிர, அமெரிக்க அணிக்காக அதிகபட்ச ரன் (173) குவித்த வீரரும் இவரே ஆவார். இந்த நிலையில்தான், ஜாஸ்கரன் மல்கோத்ரா மீண்டும் ஒருமுறை 6 பந்துகளில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதல் வீரராக இணைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த ஜாஸ்கரன் மல்கோத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டராக இருந்தவர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையிலும்கூட, இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், உடனே அமெரிக்கா சென்ற அவருக்கு, அதேவேகத்தில் தேசிய அணியிலும் இடம் கிடைத்தது. அவர் தற்போது அமெரிக்க அணிக்காகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இதையும் படிக்க: சர்ச்சைக்குரிய வகையில் அவுட்: ஏஞ்சலோ மேத்யூஸ் விமர்சனமும் ஷகிப் அல் ஹசன் பதிலும்
* மேற்கிந்திய தீவு அணி வீரரான சர் கேரி சோபர்ஸ், 1968ஆம் ஆண்டு கிளாம்மோர்கன் அணிக்கு எதிராக, கவுண்டி கிரிக்கெட்டில் முதல்முறையாக சிக்ஸர் அடித்தார்.
* இதற்குப் பிறகு 1985ஆம் ஆண்டு, இந்திய வீரரான ரவி சாஸ்திரி மும்பை அணியில் விளையாடியபோது, பரோடா அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் சிக்ஸர் அடித்திருந்தார்.
* இவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 2007ஆம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்க வீரர் கிப்ஸ், நெதர்லாந்துக்கு எதிராக 6 சிக்ஸர் அடித்தார்.
* அடுத்து அதேஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
* இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ரோஸ் ஒயிட்லி, யார்க்ஷயர் வைகின்ஸ் அணிக்கு எதிராக டி20 பிளாஸ்ட் தொடரில் 2017ஆம் ஆண்டு சிக்ஸர் அடித்தார்.
* அடுத்து 2018ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் ஹஸரத்துல்லா ஜாஜாய், பால்க் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்தார்.
* அடுத்து 2020ஆம் ஆண்டு சூப்பர் ஸ்மாஸ் தொடரில் கேண்டர்புரி கிங்ஸ் வீரரான லியோ கார்டர், நார்த்தன் நைட்ஸ் அணிக்கு எதிராக 6 சிக்ஸர் அடித்தார்.
* அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவு அணி வீரரான பொல்லார்ட் 6 சிக்ஸர் அடித்தார்.
* அடுத்து அதே ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில் திசாரா பெராரா, அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 6 சிக்ஸர் அடித்தார்.
* இறுதியாக, அதே ஆண்டில் ஒருநாள் தொடர் ஒன்றில், அமெரிக்க வீரர் ஜாஸ்கரன் வீரர் மல்கோத்ரா, பாபுவா நியூ கினியா அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்தார். தற்போது அவரே, பாகிஸ்தான் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 6 சிக்ஸர் அடித்துள்ளார்.