சியாட்டில் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் பூரண் ஆடிய ஆட்டத்தை இன்னும் பல ஆண்டு காலத்துக்கு அமெரிக்க கிரிக்கெட் வட்டாரம் பேசப் போகிறது. அந்த அணி 184 ரன்களை சேஸ் செய்ய, தனி ஆளாக 137 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் பூரண். அதுவும் வெறும் 55 பந்துகளில் 137 ரன்கள்! 10 பௌண்டரிகள், 13 சிக்ஸர்கள் என ஓர்காஸ் பௌலர்களைப் பந்தாடினார் அவர். 16 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார். இன்னும் சில காலம் முறியடிக்கப்பட முடியாத பல சாதனைகள் படைத்திருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் மேலும் 2 அரைசதங்களோடு மொத்தம் 388 ரன்கள் எடுத்து இந்தத் தொடரின் டாப் ஸ்கோரராகவும் விளங்கியிருக்கிறார். முதல் 2 போட்டிகளிலுமே தோற்றிருந்த MI அணியின் ஆட்டம் மாறியதற்கு பூரணின் அசத்தல் ஃபார்ம் முக்கியக் காரணம். பேட்டிங்கில் மட்டுமல்லாமல், கேப்டன்சியிலும் அசத்தினார் பூரண். கரண் பொல்லார்ட் காயத்தால் ஆட முடியாத நிலை ஏற்பட, அந்த இடத்தையும் மிகச் சிறப்பாக பூர்த்தி செய்தார் அவர். மேட்ச் அப்களுக்கு ஏற்ப பௌலர்களைப் பயன்படுத்தி அசத்தினார். ஒட்டுமொத்தமாக இந்த சீசனின் தொடர் நாயகன் விருதையும் வென்றார்!
பூரணின் பேட்டிங்குக்கு இணையாக இருந்தது இந்தத் தொடரில் போல்ட்டின் பந்துவீச்சு. சொல்லப்போனால், இன்னும் சிறப்பாகவே இருந்தது. 8 போட்டிகளிலும் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அவர், ஒரு ஆட்டத்தில் கூட விக்கெட் வீழ்த்தாமல் இருக்கவில்லை. அதிலும் கடைசி 4 போட்டிகளில் மட்டும் 15 விக்கெட்டுகள்! ஒவ்வொரு அணியின் பேட்ஸ்மேனையும் கதிகலங்க வைத்தார் போல்ட். ஒவ்வொரு எதிரணியும் தொடக்க ஓவர்களிலேயே இவரை சமாளிக்க முடியாமல் தடுமாறின. ஆனால் ஐபிஎல் போல் பவர்பிளேவில் மட்டுமல்லாமல் இந்தத் தொடரில் டெத் ஓவர்களிலும் அசத்தினார் அவர். முன்பை விட அதிக நக்கிள் பால்களை அவர் பயன்படுத்தினார். அதுவும் அமெரிக்காவில் அவருக்குப் பெரிய அளவில் உதவியது. பூரணின் வெறித்தனமான ஃபைனல் இன்னிங்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் இவர்தான் தொடர் நாயகன்.
5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியோடு கடைசி இடமே பிடித்தது லாஸ் ஏஞ்சலஸ் அணி. இருந்தாலும் அந்த அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் போராடினால் ஆண்ட்ரே ரஸல். 5 போட்டிகளில் 68.66 என்ற அட்டகாசமான சராசரியில் 206 ரன்கள் குவித்தார் அவர். அதுவும் சுமார் 150+ என்ற ஸ்டிரைக் ரேட்டில். இந்த மேஜர் லீக் சீசனில் மிகச் சிறந்த சராசரி வைத்திருப்பவர் ரஸல் தான். சாம்பியன் MIகு எதிரான போட்டியில் மட்டும் 2 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். மற்ற 4 இன்னிங்ஸ்களிலுமே 30+ ரன்கள் எடுத்தார். 2 போட்டிகளில் அரைசதங்கள் அடித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் முடிந்தவரை பந்துவீச்சிலும் தன் பங்களிப்பைக் கொடுத்தார் அவர். ஐபிஎல் போல் அதிக விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர்.
இந்தியாவில் பிறந்தவரான சௌரப் நெட்ரவால்கர் ஒருகட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக டிரயல்ஸில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பிறகு அமெரிக்கா சென்றுவிட்ட அவர், அங்கே தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். இப்போது முதல் MLC சீசனில் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார் அவர். 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்த இடது கை வேகப்பந்துவிச்சாளர் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கெதிரான ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார். 17 பந்துகளே வீசிய அவர், வெறும் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் ஹெய்ன்ரிச் கிளாசன். MI நியூ யார்க் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் சதமடித்து சியாட்டில் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடிக்க உதவினார். இந்த ஆண்டு மூன்று கிரிக்கெட் லீகுகளில் சதமடித்து அசத்தியிருக்கிறார் அவர். SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் சதமடித்திருந்தார் அவர். 6 இன்னிங்ஸ்களில் 58.75 என்ற சராசரியில் 235 ரன்கள் எடுத்து இந்த சீசனின் மூன்றாவது டாப் ஸ்கோரராகியிருக்கிறார் அவர்.