INDvSA
INDvSAPTI

INDvSA | தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியாவின் டாப் 5 பிளேயர்கள்..!

தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்க பௌலர்களை சமாளித்து நிலைத்து நின்ற ஒரே இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டும் தான்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த ரோஹித் அண்ட் கோ, இரண்டாவது போட்டியில் ஒன்றரை நாள்களிலேயே வெற்றியை பதிவு செய்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என சமனில் முடிந்திருக்கிறது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட டாப் 5 இந்திய வீரர்கள் யார்?

5. முகேஷ் குமார் - 1 போட்டியில் 4 விக்கெட்டுகள்

Mukesh Kumar
Mukesh KumarPTI

முதல் டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் கேப் டவுனில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் அவர். முதல் இன்னிங்ஸில் 14 பந்துகளே பந்துவீசி ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் முகேஷ். அதைக்கூட சிராஜின் அட்டகாச செயல்பட்டாக்குப் பின் வந்தது என்று நினைத்துவிடலாம். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இவர்தான் தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். டீன் எல்கரின் மிகப் பெரிய விக்கெட்டை, அவரது கடைசி இன்னிங்ஸில் வீழ்த்தியது முகேஷ் தான். டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப சரியான லைன் & லென்த்தை வீசினார் அவர். கூடிய விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் முகேஷ் குமார்.

4. கே.எல்.ராகுல் - 3 இன்னிங்ஸ்களில் 113 ரன்கள்

KL Rahul
KL RahulPTI

செஞ்சூரியனில் ஒட்டுமொத்த அணியும் தடுமாறியபோது தனி ஆளாக நின்று போராடினார் கே.எல்.ராகுல். பயமுறுத்திய தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களை சமாளித்து இரண்டாவது செஷன் முழுவதும் தாக்குப்பிடித்தார் அவர். ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் போன்றவர்களை வைத்துக்கொண்டு சமாளித்ததோடு மட்டுமல்லாமல், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சற்று அதிரடியும் காட்டினார். 14 ஃபோர்கள், 4 சிக்ஸர் உள்பட 101 ரன்கள் விளாசினார் அவர். இந்தத் தொடரில் அடிக்கப்பட்ட 2 சதங்களில் இதுவும் ஒன்று. இந்தியா சார்பாக அடிக்கப்பட்ட ஒரே சதம்! ராகுலின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் நிச்சயம் இதுவும் ஒன்றாக நிச்சயம் கொண்டாடப்படும்.

3. முகமது சிராஜ்

Mohammed Siraj
Mohammed SirajAtul Yadav

கேப் டவுனில் தன் அட்டகாசமான பந்துவீச்சால் முதல் செஷனிலேயே தென்னாப்பிரிக்க அணியைப் பந்தாடினார் முகமது சிராஜ். வேகம், ஸ்விங் இரண்டையும் வெளிப்படுத்தியவர், தொடர்ந்து ஸ்டம்புகளை அட்டாக் செய்தார். திடீரென பந்துகளை வெளியே எடுத்துச் சென்று பேட்ஸ்மேன்களை காலி செய்தார். ஒரு வேகப்பந்துவீச்சாளர் தொடர்ந்து 9 ஓவர் ஸ்பெல் வீசி ஒட்டுமொத்தமாக இன்னிங்ஸை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்தார் சிராஜ். இவருடைய 9-3-15-6 என்றதொரு ஸ்பெல்லை நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஸ்பெல்களுள் ஒன்றாக யாருமே கருதுவார்கள். இந்த அட்டகாசமான ஸ்பெல்லுக்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் சிராஜ்.

2. ஜஸ்ப்ரித் பும்ரா - 3 இன்னிங்ஸில் 12 விக்கெட்டுகள்

Jasprit Bumrah
Jasprit BumrahAtul Yadav

தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் உடன் இணைந்து தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா. செஞ்சூரியனில் இந்திய பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருந்த போது தனி ஆளாகப் போராடினார் பும்ரா. அந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், கேப் டவுனில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் சிராஜுடன் இணைந்து சிறந்த டெஸ்ட் ஸ்பெல்களில் ஒன்றை வீசினார் பும்ரா. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் எதிர்த்து ஆடியபோது, அவர்கள் மிடில் ஆர்டரை மொத்தமாக உடைத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1. விராட் கோலி - 4 இன்னிங்ஸில் 172 ரன்கள்

Virat Kohli
Virat KohliAtul Yadav

இந்தத் தொடரில் விராட் கோலி மிகப் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடிடவில்லை. ஆட்டத்தை மாற்றிவிடவில்லை. ஆனால் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தன் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்க பௌலர்களை சமாளித்து நிலைத்து நின்ற ஒரே இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டும் தான். இடைவெளியே இல்லாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பியபோதும் கூட நிலைத்து நின்று போராடினார் விராட். தன் முழு ஃபார்மில் இருக்கும் விராட் சதமே அடிக்காவிட்டாலும், மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸைக் காட்டியிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com