2023 ஐசிசி உலகக் கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி, நடப்பு சாம்பியனுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றி என எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததுமாக இந்த உலகக் கோப்பை சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு டாப் 3 இடங்களில் அமர்ந்திருப்பவர்கள் யார்?
பாகிஸ்தான்: ரன்கள் - 248, சராசரி - 124.00, ஸ்டிரைக் ரேட்: 93.58
ஒரு சதம், ஒரு அரைசதம் என அதிரடியாக இந்த உலகக் கோப்பையைத் தொடங்கிய ரிஸ்வான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் ஒரு ரன்னில் இன்னொரு அரைசதத்தைத் தவறவிட்டார். கேப்டன் பாபர் ஆசம் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த அணியின் தூணாக நின்று ஒவ்வொரு சூழ்நிலையில் இருந்தும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் அவர். நெதர்லாந்துக்கு எதிராக டாப் ஆர்டர் சரிவை நிறுத்தினார், இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய உலகக் கோப்பை சேஸை அரங்கேற்றினார். இந்தியாவுக்கு எதிராக மட்டும் பும்ராவின் ஒரு அபார பந்தால் ஏமாந்துவிட்டார். இல்லையெனில் அன்றும் தனி ஒருவனாக ஜொலித்திருப்பார் அவர்.
நியூசிலாந்து: ரன்கள் - 229, சராசரி - 114.50, ஸ்டிரைக் ரேட்: 104.09
இந்திய ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களை விடவுமே சிறப்பாக ஆடக்கூடியவர் டெவன் கான்வே. உலகக் கோப்பை அரங்கிலும் தன் ஐபிஎல் ஃபார்மை இறக்கிவிட்டார் அவர். முதல் போட்டியிலேயே ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்து உலக சாம்பியனைப் பந்தாட முக்கியக் காரணமாக விளங்கினார் கான்வே. மூன்று போட்டிகளிலுமே நல்ல தொடக்கங்கள் கிடைத்திருந்தாலும் முதல் போட்டியைப் போல் அவற்றை பெரிய ஸ்கோராக அவரால் மாற்ற முடியவில்லை. இருந்தாலும் அவரது கன்சிஸ்டன்ஸி நிச்சயம் அந்த அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கை தான்.
தென்னாப்பிரிக்கா: ரன்கள் - 229, சராசரி - 114.50, ஸ்டிரைக் ரேட்: 104.09
தன் கடைசி ஒருநாள் தொடரில் கட்டம் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார் டி காக். முதலிரு போட்டிகளிலுமே சதமடித்து அட்டகாசமான தொடக்கத்தை தென்னாப்பிரிக்க அணிக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். கடினமான ஆடுகளமாகக் கருதப்பட்ட லக்னோவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் ஆடிய ஆட்டம் இத்தொடரின் மிகமுக்கிய இன்னிங்ஸ்களுள் ஒன்று. நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் ஸ்பின் அட்டாக்கால் 20 ரன்களுக்கே வீழ்ந்துவிட்டார்.
இந்தியா: ஓவர்கள் - 27, விக்கெட்டுகள் - 8, எகானமி - 3.44, சராசரி - 11.62
இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததோடு, ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோரை விட தானே மிகப் பெரிய மேட்ச் வின்னர் என்பதையும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா. மூன்று போட்டிகளிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவர், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் கூட மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறார். பவர்பிளே, மிடில் ஓவர், டெத் என எப்போது ரோஹித் அழைத்தாலும், அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ரிஸ்வான் விக்கெட்டை வீழ்த்தியது நிச்சயம் இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த பந்துகளுள் ஒன்றாகக் கொண்டாடப்படும்.
நியூசிலாந்து: ஓவர்கள் - 30, விக்கெட்டுகள் - 8, எகானமி - 4.23, சராசரி - 15.87
இந்திய ஆடுகளங்களை எப்போதுமே விரும்பும் மிட்செல் சான்ட்னர், இந்த உலகக் கோப்பையில் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகனாகவும் முடிசூடினார் இந்த சூப்பர் கிங்ஸ் வீரர். வேகப்பந்துவீச்சாளர்கள் 'pace variation' மூலம் பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவது போல், ஸ்பின்னரான இவரும் தன் வேகத்தைக் கூட்டிக் குறைத்து பேட்ஸ்மேன்களைத் தடுமாற வைக்கிறார். இவர் சிறப்பாக செயல்படுவதால், ஈஷ் சோதியின் தேவை அணிக்கு இருக்கவில்லை. அந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இந்த இடது கை ஸ்பின்னர்.
நியூசிலாந்து: ஓவர்கள் - 28.3, விக்கெட்டுகள் - 8, எகானமி - 5.12, சராசரி - 18.25
டிம் சௌத்தி, லாக்கி ஃபெர்குசன் என இரு சீனியர்கள் காயமடைந்ததால் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ஹென்றி. இதுவரை பந்துவீசிய 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளாவது எடுத்திருக்கிறார். விக்கெட்டுகள் எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், பவர்பிளேவில் இவர் வீசும் லைன் மற்றும் லென்த் எதிரணி ஓப்பனர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் ஆட்டம் காண, இவரது ஸ்பெல்லும் ஒரு காரணம். இனி டிம் சௌத்தி முழு ஃபிட்னஸோடு களம் கண்டாலும் ஹென்றியை வெளியே அமரவைக்க முடியுமா தெரியவில்லை.