இங்கிலாந்தின் 'தி 100' லீகின் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது ஓவல் இன்வின்சிபிள்ஸ். ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை 14 ரன்களில் வீழ்த்தி கோப்பை வென்றது அந்த அணி. பாதாளத்தில் இருந்த அந்த அணியை தங்களின் சாதனை பார்ட்னர்ஷிப் மூலம் கரையேற்றினார்கள் ஜேம்ஸ் நீஷமும், டாம் கரணும்.
2023 தி 100 சீசன் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், ஓவல் இன்வின்சிபிள்ஸ், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், சதர்ன் பிரேவ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. தி 100 சுற்றில் 3 அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் நெட் ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடம் பிடித்திருந்த வெல்ஷ் ஃபயர் வெளியேற நேர்ந்தது. 6 போட்டிகளில் வெற்றி பெற்ற ஓவல் இன்வின்சிபில்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்குத் தகுதி பெற்றது. எலிமினேட்டரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி ஃபைனலுக்குத் தகுதி பெற்றது மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ். சதர்ன் பிரேவ் அணி 196 ரன்கள் குவித்திருந்தபோதும், கேப்டன் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் போட்டியை வென்றது ஒரிஜினல்ஸ்.
ஞாயிற்றிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் கேப்டன் ஜாஸ் பட்லர். இன்வின்சிபிள்ஸ் ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் நட்சத்திர வீரர் ஜேசன் ராய். பிளே ஆஃப் சுற்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங்கும் 5 ரன்களில் கிளீசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சாம் கரண் டக் அவுட் ஆக, வில் ஜேக்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். 36வது பந்தில் கேப்டன் பில்லிங்ஸை ஐந்தாவது விக்கெட்டாக இழந்திருந்தபோது, வெறும் 34 ரன்களே எடுத்திருந்தது இன்வின்சிபில்ஸ். மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் நிச்சயம் போட்டியை வென்றுவிடும் என்று நினைத்திருக்க, ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியது ஜேம்ஸ் நீஷம் - டாம் கரண் கூட்டணி.
சில பந்துகள் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட இருவரும், சீக்கிரமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். ஜமான் கான் வீசிய ஒன்பதாவது செட்டில் இரண்டு பௌண்டரிகள் அடித்து தன் வானவேடிக்கையை நீஷம் தொடங்கி வைக்க, அடுத்த செட்டிலேயே சிக்ஸர் விளாசி கோதாவில் இணைந்தார் டாம் கரண். ஜமான் கான், கிளீசன், டாம் ஹார்ட்லி, ஜாஷ் லிட்டில் என ஒவ்வொருவரின் பந்துவீச்சிலும் பௌண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்துகொண்டே இருந்தன. 26 பந்துகளில் டாம் கரண் அரைசதம் கடக்க, 29 பந்துகளில் தன் அரைசதத்தைக் கடந்தார் ஜேம்ஸ் நீஷம். 65 பந்துகளில் இந்த பார்ட்னர்ஷிப் 127 ரன்கள் குவித்தது. தி 100 வரலாற்றில் இதுதான் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆட, ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 161 ரன்கள் எடுத்தது. ஜேம்ஸ் நீஷம் 57 ரன்களும் (33 பந்துகள், 7 பௌண்டரிகள், 1 சிக்ஸர்), டாம் கரண் 67 ரன்களும் (34 பந்துகள், 4 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
162 என்ற இலக்கை சேஸ் செய்த ஒரிஜினல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ், ஜாஸ் பட்லர் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இந்த இன்னிங்ஸிலும் ஒரிஜினல்ஸுக்கு எமனாக வந்து நின்றார் டாம் கரண். 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த ஜேக்ஸை அவர் வெளியேற்ற, மான்செஸ்டர் ஒரிஜினல்ஸின் சரிவு தொடங்கியது. நிதானமாக விளையாடிய கேப்டன் பட்லர் 15 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ் ஹோல்டன் மட்டும் ஓரளவு ஆறுதல் தரும் விதமாக (25 பந்துகளில் 37 ரன்கள்) விளையாடினார்.
கடைசி கட்டத்தில் ஜேமி ஓவர்டன், டாம் ஹார்ட்லி இருவரும் சற்று அதிரடி காட்டினார்கள். இருந்தாலும் மிகவும் தாமதமானதால் ஒரிஜினல்ஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 6 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 147 ரன்களே எடுத்தது. 14 ரன்களில் போட்டியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஓவல் இன்வின்சிபிள்ஸ். டாம் கரண் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தத் தொடரில் 202 ரன்கள் எடுத்ததோடு 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஒரிஜினல்ஸ் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் தொடர் நாயகன் விருது வென்றார்.