2007 ஒருநாள் உலகக்கோப்பையில் மிகப்பெரிய அடி, கத்துக்குட்டி அணியான வங்கதேசத்துக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் ஒட்டுமொத்த இந்திய அணியும் கிட்டத்தட்ட தாழ்வுமனப்பான்மையில் இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு பெரிய உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு 2007 டி20 உலகக்கோப்பை வருகிறது. இந்திய அணியின் மூத்தவீரர்கள் யாருக்கும் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பதால் தொடரிலிருந்து விலகிக்கொள்கிறார்கள். புது கேப்டனாக தோனி நியமிக்கப்படுகிறார்.
’அதாவது என்ன பெரிதாக நடந்துவிட போகிறது, ஏதோ போய்ட்டு ஆடிட்டு வாங்க’ என்ற சலிப்பு தோரணையோடு தான் தோனியின் கைகளில் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
புதிய கேப்டன் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படுகிறது. அறிவிப்பை பார்த்த இந்திய ரசிகர்களுக்கும் “யார் இது புது கேப்டன்? இவருக்கு கேப்டன்சி பற்றி என்ன தெரியும்? ஒரு அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட இல்லையே, எப்படியும் போயிட்டு தோத்துட்டுதான் வரப்போறாங்க” என்ற எண்ணமே இருந்தது.
ஆனால் புதிய கேப்டனான தோனி கோப்பையை வென்று நாடு திரும்பும் நம்பிக்கையில் இருந்தார், அவர் தன் அணி மீது அளவில்லா நம்பிக்கை கொண்டிருந்தார். 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் வாங்கிய அடியோ என்னவோ, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நாக் அவுட் போட்டியில் சம்பவம் செய்தபோது தான், இந்த இந்திய அணி கிட்ட என்னவோ இருக்குபா என்ற எண்ணமே இந்திய ரசிகர்களுக்கு தோன்றியது.
கிரிக்கெட் உலகை தற்போது கட்டிப்போட்டு வைத்திருக்கும் டி20 கிரிக்கெட்டின் முதல் பதிப்பு அது. இந்திய அணி 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு பெரிய படுதோல்வியை சந்தித்து வெளியேறியதால், பெரிதும் இந்திய ரசிகர்களுக்கு 2007 டி20 உலகக்கோப்பை மீது பிடிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தியாவின் இளம் அணியை தோனி வழிநடத்திய விதம் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதினாலே அது பெரிய கொண்டாட்டம்தான். அப்படியிருக்கையில் 2007 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தியா அடித்த 157 ரன்களை விரட்டுவதில் பாகிஸ்தான் அணி வெற்றிகரமாகவே செயல்பட்டது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மிஸ்பா உல் ஹக் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 37 பந்துகளில் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் வெற்றிபெற கடைசி 6 பந்தில் 13 ரன்களும், இந்தியா வெற்றிபெற 1 விக்கெட்டும் தேவையாக இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் 2வது பந்தில் சிக்சரை பறக்கவிட்ட மிஸ்பா உல் ஹக், இந்திய ரசிகர்களின் தலைமீது இடியை இறக்கினார். கிட்டத்தட்ட இந்திய ரசிகர்களின் முகம் வாடியே போனது.
ஆனால் அடுத்த பந்திலேயே ”In the air, Sreesanth takes it, India win! Unbelievable scenes here at the bull ring” என்ற ரவி சாஸ்திரியின் குரல் ஒலித்தது. மிஸ்பா பின்பக்கமாய் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்க, அதை லாவகமாக கையில் ஏந்தினார் ஸ்ரீசாந்த். நொடி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது, தோனி ஸ்டம்பை பிடிங்கிக்கொண்டு ஓடிவருகிறார், பெவிலியனில் இருந்த இந்திய சப்போர்ட்டிங் ஸ்டாஃப் கிரவுண்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தனர். இந்தியா முதல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டது, மிஸ்பா உல் ஹக் செய்த தவறுக்காக தலையை குனிந்து அமர்ந்திருக்கிறார். அப்போது ஒலித்த ரவி சாஸ்திரியின் குரல், இப்போதும் அந்த அற்புதமான தருணத்தை நம் நெஞ்சில் படரவிடும்.
சிறுதுளி நம்பிக்கை கூட இல்லாமல் சென்ற தோனி தலைமையிலான அணி, ஒரு புதிய சாக்பதத்தை அங்கிருந்து தொடங்கிவைத்தது.
டி20 உலகக்கோப்பையை வென்றபிறகு பேசிய தோனி யாருக்கும் எங்கள் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் இன்று எங்கள் வாழ்நாளில் பொக்கிஷமான ஒன்றை அடைந்துவிட்டோம் என்று கூறினார்.
உலகக்கோப்பை வென்ற பிறகு பேசிய தோனி, “என் வாழ்நாள் முழுவதும் நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. நான் அணிவீரர்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்த விரும்புகிறேன் மற்றும் அவர்கள் என்னுடைய நம்பிக்கைக்கு அளித்த பதிலுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, இன்று நாங்கள் விளையாடிய விதம் ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கு தகுதியானது” என்று கூறியிருந்தார்.