கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் என்றைக்கும் ரசிகர்களால் ’தல’ எனச் செல்லமாய் அழைக்கப்படும் தோனிக்கும் ஒரு தனி இடம் உண்டு. அவரால் இந்திய அணி பெற்ற வெற்றிகளும், சாதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. கபில் தேவ்வுக்குப் பிறகு உலகக்கோப்பைகளை உச்சி முகர்ந்தவர் தோனிதான். அப்படியான தோனி, வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேசப் போட்டியில் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனானார்.
கடந்த 2007 - 2017ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 10 வருடங்கள் இந்திய அணியின் அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த தோனி, 2010 மற்றும் 2016 என இருமுறை ஆசியக் கோப்பையையும், 2007இல் டி20 உலகக் கோப்பை, 2011இல் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013இல் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்று தந்துள்ளார். இப்படி இந்திய அணிக்காகப் பல சாதனைகளைப் படைத்த தோனி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அரை இறுதிப்போட்டியில் கடைசியாக விளையாடினார்.
அந்தப் போட்டியில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி அரை இறுதியோடு அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதன்பிறகு ஓய்வுகுறித்த எந்த அறிவிப்பையும் தோனி சொல்லாமல் இருந்தார். அந்தச் சூழலில்தான் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த முடிந்த சீசனில்கூட அவர் தலைமையிலான சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும், அவருடைய தலைமைப் பண்பு இன்றுவரை பல கிரிக்கெட் வல்லுநர்களாலும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய அணி தோல்வியைத் தழுவும்போதெல்லாம், தோனியின் தலைமைப் பண்பே பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் இணைப்புப் பாலமாக தோனி விளங்கிவருகிறார். தோனி இன்றுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும், அவரை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இணையதளங்களில் அவருடைய ஓய்வு பற்றிய செய்திகளை ரசிகர்கள் இன்று வைரலாக்கி வருகின்றனர்.
கிரிக்கெட்டைத் தவிர தோனி, விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். அதுபோக, மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங்கும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழில் ’LGM’ (Lets Get Married) என்ற திரைப்படத்தைத் தயாரித்து சமீபத்தில் வெளியிட்டனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம், நடிகர் விஜய் அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தோனி, விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.