2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம். இந்த எபிசோடில் நாம் பார்க்கப்போவது பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கி ஒருதலைப்பட்சமாய் நடந்து முடிந்த 2015 உலகக் கோப்பை ஃபைனலை.
2015 உலகக் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சேர்ந்து நடத்தின. அதனால் அந்த இரு அணிகளுமே கோப்பை வெல்லக் கூடிய அணிகளாகக் கருதப்பட்டன. நியூசிலாந்தும் அந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தது. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் மிகச் சிறப்பாக, மிகவும் தைரியமாக அணியை வழிநடத்தினார். மார்டின் குப்தில் அந்தத் தொடரில் இரட்டைச் சதம் அடித்திருந்தார். கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கிராண்ட் எலியாட் என எல்லோரும் ஃபார்மில் இருந்தார்கள். பந்துவீச்சிலோ டிரென்ட் போல்ட் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த அணியும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. 2003, 2007 தொடர்களில் பான்டிங்கின் ஆஸ்திரேலிய அணி எப்படி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததோ அப்படி விளையாடிய 8 போட்டிகளையும் வென்று ஃபைனலுக்குள் நுழைந்தது பிளாக் கேப்ஸ்.
லீக் சுற்றில் அந்த பலமான ஆஸ்திரேலியாவையுமே கூட வென்றிருந்தது. ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடந்திருந்த அந்தப் போட்டியில் 151 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் ஆக்கியது நியூசிலாந்து. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் அதிரடியை கைவிடாமல் 24வது ஓவரிலேயே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது அந்த அணி. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் நிச்சயம் அந்த அணி சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். தங்கள் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்று கனவு கண்டனர். ஆனால் அவை எல்லாம் விரைவிலேயே நொறுங்கிப் போகின.
நியூசிலாந்து அணிக்கு அந்தப் போட்டியில் இருந்த முதல் சவால் அவர்கள் அதை 1 லட்சம் பேருக்கு முன்னாள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவேண்டும் என்பது. அதற்கு முன் அந்தத் தொடர் முழுவதையும் தங்கள் சொந்த மைதானங்களில் தான் விளையாடியது அந்த அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த லீக் போட்டி உள்பட.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து ரசிகர்களின் ஆசைகளையும் கனவுகளையும் சுமந்துகொண்டு களமிறங்கினார் அவர். அந்தத் தொடரில் அவர் ஆடிய விதம் ஒவ்வொரு பௌலருக்கும் கிலி ஏற்படுத்தியது. உலகக் கோப்பை என்ற தயக்கம் ஏதுமில்லாமல், அப்போதே Bazballன் டீசரைக் காட்டினார் அவர். அந்தத் தொடரில் சுமார் 190 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். பவர்பிளேயில் பௌலர் யார் என்று பார்க்காமல் பந்தாடினார். அவர் கொடுக்கும் அசுர வேக அசத்தல் தொடக்கம் மற்ற வீரர்களுக்குப் பெரும் நம்பிக்கை கொடுத்தது. பெரிய இன்னிங்ஸ்கள் ஆடாவிட்டாலும், அவரது ஒவ்வொரு இன்னிங்ஸும் அந்தப் போட்டிகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால் அந்த இறுதிப் போட்டியில் அவரால் அப்படி எதுவும் செய்ய முடியவில்லை.
ஒவ்வொரு பௌலருக்கும் பயம் காட்டிய மெக்கல்லமை அந்த இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே வெளியேற்றினார் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். அசுர வேகத்தில் வந்து கிரீஸுக்கு அருகே பிட்சான பந்து, ஸ்டார்க்கின் வழக்கமான ஸ்விங்கால் சிறப்பாக நகர்ந்து ஸ்டம்பை சாய்த்தது. சரிந்து விழுந்த ஸ்டம்போடு சேர்ந்து நியூசிலாந்து ரசிகர்களின் நம்பிக்கையும் நொறுங்கியது. அந்தத் தொடர் முழுவதும் மெக்கல்லமின் அணுகுமுறையே அதற்கு மேல் நியூசிலாந்து இன்னிங்ஸ் எப்படி இருக்கப்போகிறது என்ற டெம்போவை முடிவு செய்தது. இந்தப் போட்டியிலும் அதுவே நடந்தது. அவர் அவுட்டாக, அது மொத்த அணிக்கும் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. நியூசிலாந்து வீரர்கள் மிகவும் கவனமாக ஆடினார்கள். அது அவர்களின் ரன்ரேட் பின்னடைய காரணமாக அமைந்தது. மெல்ல மெல்ல அழுத்தம் கூட விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. அரையிறிதியில் அந்த அணி வெற்றி பெறக் காரணமாக இருந்த கிராண்ட் எலியாட், ராஸ் டெய்லரோடு இணைந்து போராடினார். ஆனால் இருவரையும் வெளியேற்றி அந்த அணியை முற்றிலும் குலைத்தார் ஜேம்ஸ் ஃபாக்னர்.
இறுதியில் 45 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து. 1983 உலகக் கோப்பையில் இந்தியா எடுத்த அதே ஸ்கோர். இந்தியாவைப் போல் ஏதேனும் மாயம் நிகழ்த்தியிருந்தால் அந்த அணி வென்றிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. இரண்டாவது ஓவரிலேயே ஃபின்ச்சை போல்ட் வெளியேற்றிருந்தாலும், அதன்பிறகு ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் கிளார்க் இருவரும் அரைசதங்கள் கடந்து அந்த அணி சாம்பியன் ஆவதை உறுதி செய்தனர்.
மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஃபாக்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றாலும், மூன்றாவது பந்திலேயே மெக்கல்லமை வெளியேற்றிய ஸ்டார்க் தான் இந்தப் போட்டியில் மாபெரும் தாக்கம் ஏற்படுத்தியவர். அவர்தான் இந்தத் தொடரின் தொடர் நாயகன்!