டெஸ்ட் ஃபார்மட்டுக்குத் திரும்பியிருப்பதே தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாகக் கூறியிருக்கிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். தான் விபத்தில் காயமடைந்த பிறகு 3 ஃபார்மட்டிலும் கம்பேக் கொடுக்கவேண்டும் என்று விரும்பியதாகவும், அது நிறைவேறியிருப்பதால் திருப்தி அடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் பண்ட்.
கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடுமையாக காயமடைந்தார். அவர் கிரிக்கெட் களத்துக்குத் திரும்புவதே கடினம் என்று நினைத்திருந்த நிலையில் வெறித்தனமாகப் போராடி மகத்தான கம்பேக்கை அரங்கேற்றினார் பண்ட். கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்று அசத்தினார் அவர். டி20, ஒருநாள் போட்டிகளில் மீண்டும் ஆடியிருந்த அவர், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மூலம் அவரது ஃபேவரிட் ஃபார்மட்டுக்கும் திரும்பினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பண்ட், முதல் இன்னிங்ஸில் 39 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களும் எடுத்தார். வழக்கம்போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தைக் கடைபிடித்த அவர் முதல் இன்னிங்ஸில் 75 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 85 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் ஆடினார். என்னதான் 21 மாதங்களுக்குப் பிறகு இந்த ஃபார்மட்டுக்குத் திரும்பியிருந்தாலும் எந்த சலனமும் காட்டாமல் தன்னுடைய பழைய பாணியையே காட்டினார் பண்ட்.
இந்த சிறப்பான தருணத்தைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த பண்ட், "நிச்சயமாக இது மிகவும் எமோஷனலான தருணம். மீண்டும் திரும்பி வந்து ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முதல் இன்னிங்ஸில் என்னால் அதை செய்ய முடியவில்லை. இருந்தாலும் நான் மிகவும் நேசிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருப்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். நான் இந்த ஃபார்மட்டில் பேட்டிங் செய்வதை மிகவும் விரும்பினேன். ஒருகட்டத்தில் நான் மிகவும் எமோஷனலாக உணர்ந்தேன். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இறுதியில் நான் களத்தில் இருந்ததே எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் அதன்பின் களத்தில் செய்தது எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்று கூறினார்.
மேலும், 'இது இன்னும் ஏன் ஸ்பெஷல் என்றால் நான் சென்னையில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இரண்டாவது, நான் என் காயத்துக்குப் பிறகு நான் 3 ஃபார்மட்களிலும் விளையாடவேண்டும் என்று நினைத்தேன். அதன்பிறகு இதுதான் என்னுடைய முதல் டெஸ்ட் போட்டி. அதனால் இது இன்னும் ஸ்பெஷலாக இருக்கிறது. நான் ஒவ்வொரு நாளையும் பெரிதும் ரசிக்கிறேன்" என்றும் கூறினார் அவர்.
முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் களமிறங்கிய சூழ்நிலை மிகவும் கடினமான நிலையில் தான் இருந்தது இந்திய அணி. முதல் செஷனில் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இந்திய டாப் ஆர்டரைப் பந்தாடினார்கள். அதனால் 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அப்போது ஷுப்மன் கில் உடன் இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதனால் இந்திய அணி ஓரளவு சரிவிலிருந்து மீண்டது. என்னதான் கடினமான சூழ்நிலை என்றால் பண்ட் வழக்கம்போல் தன்னுடைய அதிரடியைத் தான் கடைப்பிடித்தார். மேலும் தன் நண்பர் கில்லுடன் இணைந்து விளையாடியதும் அந்த சூழ்நிலையை எளிதாக கையாள உதவியதாகத் தெரிவித்தார் அவர்.
"நான் ஆட்டத்தின் சூழ்நிலைகளை என்னுடைய முறையில் தான் அணுகுகிறேன். நீங்கள் 30க்கு 3 என்ற நிலையில் இருக்கும்போது நிச்சயம் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவேண்டும். அதைத்தான் நானும் ஷுப்மன் கில்லும் அங்கு செய்தோம். முக்கியமாக நீங்கள் களத்துக்கு வெளியே நல்ல உறவு வைத்திருக்கும் ஒருவரோடு விளையாடும்போதும், உரையாடும்போதும் அது இன்னும் உங்களுக்கு நல்லபடியாக உதவி செய்யும்" என்று தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைப் பற்றிப் பேசினார் பண்ட்.
இரண்டாவது இன்னிங்ஸில் அந்த பார்ட்னர்ஷிப் வேறொரு கட்டத்தை எட்டியது. இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தனர். இருவருமே சதமடிக்க, இந்திய அணி வேகமாகவும் சிறப்பாகவும் ரன் குவித்தது.
தன்னுடைய கம்பேக் டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்திய அணிக்குத் தேவையானதையும் செய்தார் பண்ட். நம்பர் 5 பொசிஷனில் ராகுலின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில், இவர் களாமிறங்கி அணியை சரிவிலிருந்து மீட்டார். மேலும் கடினமான இந்த ஃபார்மட்டில் கீப்பிங் செய்து தன்னுடைய ஃபிட்னஸையும் நிரூபித்திருக்கிறார் அவர்.