இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலிரு டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்நிலையில்தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரைக் கணக்கில் கொண்டு பும்ராவிற்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பும்ரா அணியில் இல்லாத நிலையில் சிராஜ் அவருக்குப் பதிலாக விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி நவம்பர் 10 ஆம் தேதியே ஆஸ்திரேலியாவிற்குச் செல்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மிக முக்கியமானது என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே பும்ராவிற்கு ஓய்வளிக்க திட்டமிட்டிருந்த நிலையில், முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாட வேண்டி இருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.