ஹோல்டர் வீசிய சூப்பர் ஓவரில் 4-6-4-6-6-4! வரலாற்றில் மறக்கமுடியாத சேஸிங்; சிலிர்க்கவைத்த நெதர்லாந்து

ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த 374 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து, வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து அணி.
West Indies - Netherlands
West Indies - NetherlandsTwitter
Published on

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்றுவருகிறது. தகுதிச்சுற்றுக்கான மோதலில் 10 அணிகள் விளையாடிய நிலையில், தற்போது அடுத்த கட்டத்திற்கு 6 அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது.

374 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் ; திருப்பி அடித்த நெதர்லாந்து

கடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், உலகக்கோப்பைக்கான ரேஸ்ஸில் நிலைத்திருக்க இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று தொடங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க, மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய பூரன் 65 பந்துகளில் 104 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் கைக்கோர்த்த கீமோ பவுல்லும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய 50 ஓவர் முடிவில் 374 ரன்கள் என்ற வலுவான டோட்டலை எட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

375 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 76 ரன்னில் முதல் விக்கெட்டை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது. 30 ஓவரில் 170 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்த நெதர்லாந்து அணிக்கு தேவையான ரன்ரேட்டானது 10-ஐ தாண்டி சென்றது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தேஜா நிடமானுரு மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இருவரும் போராடினர். 40 ஓவரில் 267 ரன்களை எட்டியிருந்த நெதர்லாந்து அணி வெற்றி பெற, கடைசி 10 ஓவரில் ஒவ்வொரு ஓவருக்கும் 11 ரன்கள் அடிக்கவேண்டியிருந்தது.

முக்கியமான நேரத்தில் அதிரடிக்கு திரும்பிய தேஜா அடுத்த ஓவர்களில் 16, 17 ரன்கள் அடித்து விறுவிறுவென ரன்களை எடுத்துவந்தார். இறுதிவரை களத்தில் நின்ற தேஜா நிடமானுரு சதமடித்து அசத்த கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் தேவை என போட்டி மாறியது. இந்நிலையில் 46ஆவது ஓவரை வீச வந்த ஹோல்டர் நிடமானுரு உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி பக்கம் திருப்பினார். அவ்வளவுதான் வெஸ்ட் இண்டீஸ் வென்று விடும் என்று நினைத்த போது, கடைசியாக களத்திற்கு வந்த வான் பீக் அதிரடியான பேட்டிங்கை ஆடினார். கடைசி 2 ஓவருக்கு 30 ரன்கள் தேவை என்ற இடத்தில், 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என பறக்கவிட்ட வான் பீக் 21 ரன்கள் அடித்தார். இறுதி 1 ஓவருக்கு 9 ரன்கள் தேவையான இடத்தில், முதல் பந்தை வான் பீக் பவுண்டரி அடித்தாலும் கடைசி 5 பந்தில் 2 விக்கெட்டை வீழ்த்திய அல்சாரி ஜோசப் போட்டியை சமனாக மாற்றினார். பின்னர் போட்டி சூப்பர் ஓவருக்கு மாறியது.

சூப்பர் ஓவரில் 3 சிக்சர் 3 பவுண்டரி அடித்த நெதர்லாந்து வீரர்!

சூப்பர் ஓவரில் கடைசியில் பேட்டிங் செய்த வான் பீக்கே பேட்டிங்கை தொடர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி போட்டியில் திருப்பு முனை ஏற்படுத்திய ஹோல்டர் பந்துவீசினார். எல்லாம் சரியாக வரும் என்று எதிர்ப்பார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தண்ணி காட்டினார் வான் பீக். எதிர்கொண்ட 6 பந்துகளையும் 4-6-4-6-6-4 என பவுண்டரி, சிக்சர்களாக வானவேடிக்கை காட்டிய அவர் 30 ரன்களை அடித்து அசத்தினார்.

31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஏதாவது செய்யுமா என்று எதிர்ப்பார்த்த போது முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய சார்லஸ் நம்பிக்கை அளித்தார். ஆனால் பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட வான் பீக், அடுத்த 2 பந்தில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 3 பந்துக்கு 23 ரன்கள் என போட்டி மாறிய போது, அடுத்தடுத்து 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வான் பீக் வரலாற்று வெற்றியை நெதர்லாந்து அணிக்கு தேடித்தந்தார். உலகக்கோப்பைக்கு தகுதிபெறவேண்டும் என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கனவை தகர்த்துள்ளது நெதர்லாந்து அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com