2006-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது கராச்சியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், அப்போது உலக சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பதான் பெற்றார்.
பதான் அந்த நேரத்தில் பனானா ஸ்விங்கை உருவாக்கும் திறனுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது பெயரை முத்திரை பதித்தார். ஓவரின் இரண்டாவது பாதியில் 4வது பந்தில் சல்மான் பட், 5வது பந்தில் யூனிஸ் கான் மற்றும் 6வது பந்தில் முகமது யூசுப் ஆகியோரை வெளியேற்றியதால், 18 ஆண்டுகளுக்கு முன்பு கராச்சியில் பாகிஸ்தான் டாப்-ஆர்டரை திகைக்க வைத்த அவரது ஸ்விங்-பவுலிங் உலக புகழ்பெற்றது.
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய இன்ஸ்விங் டெலிவரியால் யூனிஸ் கானை திணறடித்த பதான், நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் இறுதிப் போட்டியிலும் ஒரு அசாத்தியமான இன்ஸ்விங் டெலிவரி மூலம் யூனிஸ் கானின் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்தார். அதைப்பார்த்த இந்திய ரசிகர்கள் தங்களுடைய எண்ணங்களை 2006 ஹாட்ரிக் சம்பவத்திற்கு அழைத்துச்சென்றனர்.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரானது ஜூலை 3ம் தேதியிலிருந்து நடைபெற்றது. அதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றனர். அதில் முன்னாள் சாம்பியன் வீரர்கள் பங்கேற்று தங்களுடைய திறமையை மீட்டு எடுத்துவந்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. லீக் போட்டியில் ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக 243 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2007 தோல்விக்கு பழிவாங்கியது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மோதிய நிலையில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அம்பத்தி ராயுடு 30 பந்தில் அரைசதமடிக்க, இறுதியாக வந்து 16 பந்தில் 30 ரன்கள் விளாசிய யூசுப் பதான் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இதில் முதல் இன்னிங்ஸில் 12வது ஓவரில் யூனிஸ் கானை இன்ஸ்விங் டெலிவரி மூலம் போல்டாக்கிய இர்ஃபான் பதான் போட்டியை திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவருடைய அந்த ஸ்பெல்லை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெற்றிக்கான ரன்களையும் இர்ஃபான் பதானே அடித்தார், வெற்றிக்குபிறகு இர்ஃபானை எமோசனலாக கட்டிப்பிடித்து கொண்டாடினார் ஹர்பஜன் சிங்.