இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. முதல் போட்டி நாளை சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்குமான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்திய அணியை பொறுத்தவரையில் புது அப்டேட்டாக ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். புதிய வாய்ப்பாக யாஸ் தயாளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று முக்கிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து விளையாடவிருக்கிறது. இந்த தொடர்களில் கட்டமைக்கும் வீரர்கள்தான், அடுத்தாண்டு ஜூனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்தமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை குறிவைத்திருக்கும் இந்திய அணி சிறந்த காம்பினேஷனை கொண்டுசெல்லும் பொருட்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரையும் கண்காணித்துவருகிறது.
இந்நிலையில் சிறந்த காம்பினேஷனுக்கு செல்லும் முன்பு, அணியில் நிரந்த வீரர்களாக செயல்படவிருக்கும் 3 வீரர்கள் தங்களுடைய ஃபார்மிற்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதுவரை 2 WTC பைனல் நடைபெற்ற நிலையில், இரண்டுமுறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடியது. ஆனால் 2021 பைனலில் நியூசிலாந்துக்கு எதிராகவும், 2023 பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்தமுறை WTC கோப்பையை வெல்லவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இந்தியா இருந்துவருகிறது, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரோகித், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் என அனைவரும் அணிக்கு திரும்பும் நிலையில், இந்தியா விருப்பமான அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்தியா கோப்பை வெல்ல வேண்டுமானால் 3 வீரர்களின் கம்பேக் என்பது அவசியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த மூன்று வீரர்களாக மேட்ச் வின்னர்களான ‘விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்’ மூவரும் தங்களுடைய ஃபார்மை மீட்டு எடுத்துவருவதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 49 சராசரியுடன் 29 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் அடித்திருக்கும் விராட் கோலி, இந்தாண்டு முழுவதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2019ம் ஆண்டுக்கு பிறகு ஃபார்மில் தடுமாறிவந்த விராட் கோலி, 2021, 2022 இரண்டு வருடங்களில் 28 சராசரியுடன் 6 அரைசதங்கள் மட்டுமே அடித்து மோசமான காலகட்டத்தை கொண்டிருந்தார்.
ஆனால் 2023-ம் ஆண்டு தரமான கம்பேக் கொடுத்த விராட் கோலி 6 டெஸ்ட் போட்டிகளில் 55 சராசரியுடன் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 671 ரன்கள் குவித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் சதங்களை அடித்துவரும் விராட் கோலி, டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்பதோடு, டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு 2025 WTC கோப்பையையும் வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துவருகிறார். அவருடைய கம்பேக் என்பது டெஸ்ட்டில் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது.
தற்போது இருக்கும் இந்திய வீரர்களில் WTC இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த ஒரே வீரராக கேஎல் ராகுல் இருந்துவருகிறார். வெளிநாட்டு மண்ணில் எப்போதும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும் கேஎல் ராகுல், இங்கிலாந்து மண்ணில் இரண்டு சதம், தென்னாப்பிரிக்காவில் 2 சதம், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேச மண்ணில் தலா ஒரு சதம் என அடித்துள்ளார்.
சமீபத்தில் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியாவுக்காக முடித்துகொடுத்திருக்க வேண்டும் என எமோசனலாக பேசியிருந்த அவர், WTC கோப்பையை இந்தியா வெல்ல கம்பேக் கொடுக்க வேண்டியது அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாகவும், மேட்ச் வின்னராகவும் இருந்துவருகிறார். ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டம் இன்றளவும் ஒரு ஐகானிக் ஆட்டமாக இருந்துவருகிறது.
ஒருமுறை இங்கிலாந்து அணி ஆக்ரோசமாக ஆடுவதை பார்த்துதான் இந்தியா விளையாடுவதாக கூறப்பட்ட நிலையில், நிகழ்ச்சியிலேயே “எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என ஒருவர் இருக்கிறார், அவரது ஆட்டத்தை ஒருமுறை கூட நீங்கள் பார்த்தது இல்லையா” என ரோகித் சர்மா பதிலடி கொடுத்தார்.
அந்தளவு கேப்டனின் நம்பிக்கையான வீரராக இருக்கும் ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தியா WTC கோப்பை வெல்லவேண்டுமானால் ரிஷப் பண்ட்டின் கம்பேக் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது.