இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய அணியை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது.
அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் 282 ரன்கள் குவித்தும் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 2-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி, 3வது போட்டியில் இந்தியாவை எதிர்த்து இன்று விளையாடியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்ஸ்ஃபீல்ட் மற்றும் கேப்டன் ஹீலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டையே இந்திய அணி வீழ்த்தமுடியாமல் திணற, இரண்டு வீரர்களும் இந்திய பவுலர்களை துவம்சம் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 189 ரன்களை குவிந்த இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
82 ரன்கள் அடித்து ஹீலி சதத்தை தவறவிட்டாலும், 16 பவுண்டரிகள், 1 சிக்சர் என மிரட்டிய லிட்ச்ஃபீல்ட் 119 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். இவ்விரு வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 338 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா அணி.
339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், ஆஸ்திரேலியாவின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். ஜார்ஜியா வேர்ஹாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த, 148 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.
190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்று இந்தியாவை ஒயிட்வாஸ் செய்தது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்கவிருக்கிறது.