2023-2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உள்நாட்டு ஒருநாள் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், தஸ்மேனியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா முதலிய 6 அணிகள் விளையாடும் இந்த தொடரானது செப்டம்பர் 24 முதல் பிப்ரவரி 25ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தஸ்மேனியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தஸ்மேனியா அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓப்பனர் கேலப் 90 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு களமிறங்கிய கேப்டன் சில்க் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 85 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசிய அவர் 116 ரன்கள் குவித்து அசத்தினார். இவருடைய அபாரமான ஆட்டம் மற்றும் மற்ற வீரர்களின் அதிரடி அரைசதங்களால் தஸ்மேனியா அணி 50 ஓவர் முடிவில் 435 ரன்களை குவித்தது.
436 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய தெற்கு ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் ருத்ர தாண்டவமே ஆடினார். இனி வாழ்க்கையில் பந்தே வீச மாட்டோம் என பவுலர்கள் புலம்பும் அளவிற்கு சிக்சர் மழைகளை பொழிந்த ஜேக், ரெய்ன்பர்ட் வீசிய 3வது ஓவரில் 6, 6, 6, 4, 4, 6 என 4 சிச்கர்கள், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு ஒரே ஓவரில் 32 ரன்களை அடித்து துவம்சம் செய்தார். அதற்கு பிறகு யார் பந்துவீச வந்தாலும் சரவெடி தான் எனுமளவு அடுத்தடுத்த ஓவர்களில் 26 ரன்கள், 22, 24, 22 என அனைத்து ஓவர்களையும் பிரித்து மேய்ந்தார் ஜேக். 11 ஓவர்களில் 170 ரன்களை எட்டியது தெற்கு ஆஸ்திரேலியாவின் ரன்கள்.
அதில் 29 பந்துகளில் 12 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என விளாசிய ஜேக் ஃப்ரேசர் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஏற்கனவே 31 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்த தென்னாப்பிரிக்க வீரரான டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்தார் டிவில்லியர்ஸ்.
38 பந்துகளில் 10 பவுண்டரிகள், 13 சிக்சர்களுடன் 125 ரன்களை குவித்து ஜேக் வெளியேறிய நிலையில், அவரின் அணி 398 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் தெற்கு ஆஸ்திரேலியா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.