உலகக் கோப்பை 2023: வங்கதேசத்தின் மிடில் ஆர்டரை உடைத்து ஆட்ட நாயகனாய் மகுடம் சூடிய வேன் மீக்ரன்!

ஐசிசி 13 வது உலக கோப்பை கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 28 ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்துக்கு இடையே போட்டியானது நடைப்பெற்றது.
வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து
வங்கதேசம் மற்றும் நெதர்லாந்துமுகநூல்
Published on

போட்டி 28: வங்கதேசம் vs நெதர்லாந்து

முடிவு: 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி (நெதர்லாந்து - 229 ஆல் அவுட்; வங்கதேசம் - 142 ஆல் அவுட், 42.2 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: பால் வேன் மீக்ரன் (நெதர்லாந்து) பௌலிங்: 7.2-0-23-4

230 ரன்களை சேஸ் செய்த வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஸ்பெல்லை வீசிய ஆர்யன் தத், லோகன் வேன் பீக் இருவரும் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி ஆளுக்கு ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்கள்.

அவர்கள் ஸ்பெல் முடிந்தபோது, 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது வங்கதேசம். இதில் 3 மெய்டன் ஓவர்கள் வேறு வீசப்பட்டிருந்தது. 11வது ஓவரை வீசிய காலின் அகெர்மேனும் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அந்த ஓவரில் ஒரேயொரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 12வது ஓவரை வீச வந்தார் பால் வேன் மீக்ரன்.

நெதர்லாந்து
நெதர்லாந்துமுகநூல்

டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதைப் போல் வீசினார் அவர். இரு ஸ்லிப்கள் வைத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லென்த்திலும், ஃபுல்லாகவும் மாறி மாறி வீசிக்கொண்டே இருந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தையே நன்கு தூக்கியடித்தார் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ.

ஆனால் வேன் மீக்ரன் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. அதன் பலனாக அந்த ஓவரின் ஐந்தாவது பந்திலேயே விக்கெட் விழுந்தது. அதே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஃபுல் லென்த்தில் அவர் வீசிய பந்தை அடிக்க நினைத்த ஷான்டோ எட்ஜாக, பந்து இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. தன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வேன் மீக்ரன்.

வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து
INDvENG | ஆறாவது வெற்றியைப் பதிவு செய்யுமா இந்தியா? இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி..!

அதன்பிறகு ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஜோடு இணைந்தார். வங்கதேச அணியின் மிகமுக்கிய பார்ட்னர்ஷிப். இவர்கள் நிதானமாக ஆடினார்கள். ஆனால் அந்த கூட்டணியையும் உடைத்தார் வேன் மீக்ரன்.

அவரது மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார் வங்கதேச கேப்டன் ஷகிப். நன்றாக ஸ்டம்ப் லைனில், குட் லென்த்தில் பிட்சான பந்தில் கூடுதல் பௌன்ஸ் ஏற்படுத்தினார் வேன் மீக்ரன். பந்தை கட் செய்ய ஷகிப் நினைக்க, அவரது உடலை ஒட்டு பந்து வந்ததால் அவரால் சரியாக அடிக்க முடியவில்லை. மீண்டுமொரு எட்ஜ் ஆக, இம்முறை பந்து கீப்பரிடம் சென்று தஞ்சமடைந்தது. வேன் மீக்ரனுக்கு இரண்டாவது விக்கெட் கிடைத்தது. தான் வீசிய அடுத்த ஓவரின் நான்காவது பந்திலேயே மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார் அவர்.

இம்முறையும் பெரிய விக்கெட் தான் - முஷ்ஃபுகுர் ரஹீம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்சான பந்து, அற்புதமாக ஸ்விங் ஆகி உள்ளே நுழைந்தது. அதை எதிர்பாராத முஷ்ஃபிகுர் தவறாக ஆட, இன்சைட் எட்ஜாகி ஸ்டம்பை சாய்த்தது பந்து. ஒரு அட்டகாசமான டெலிவரியால் ஒரே ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் முஷ்ஃபிகுர்.

வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து
AUSvNZ | முதல் போட்டியிலேயே சதம், ஆட்ட நாயகன் விருது... அமர்க்களப்படுத்திய டிராவிஸ் ஹெட்..!

இப்படி மிகவும் சிறப்பாகப் பந்துவீசிய வேன் மீக்ரன், ஐந்து ஓவர்கள் வீசிய தன் முதல் ஸ்பெல்லில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதுவும் 3 பெரிய விக்கெட்டுகள்! மிடில் ஓவர்களில் வேன் மீக்ரனுக்கு இரண்டு ஓவர்கள் கொடுத்தார் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ். மொத்தம் 5 ரன்கள் கொடுத்த அவர், விக்கெட்டுகள் ஏதும் எடுக்கவில்லை. ஆனால், தன்னுடைய மூன்றாவது ஸ்பெல்லின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் எடுத்து ஆட்டத்தையும் முடித்தார்.

டஸ்கின் அஹமதுக்கு அடுத்தடுத்து ஷார்ட் பால்கள் வீசினார் அவர். டஸ்கின் புல் ஷாட் ஆட நினைக்க, மிட் விக்கெட் திசையில் டி லீட் கைகளில் விழுந்தது பந்து. தன் நான்காவது விக்கெட்டை வீழ்த்தினார் வேன் மீக்ரன். வங்கதேசம் ஆல் அவுட் ஆக, இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது நெதர்லாந்து.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இது மிகவும் ஸ்பெஷலான தருணம். நாங்கள் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்று கூறியிருந்தோம். அப்படிப் போகவேண்டுமெனில் போட்டிகளை வெல்லவேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு நாங்கள் எழுச்சி பெற்றிருக்கும் விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருந்தோம். முதல் இன்னிங்ஸ் முடிந்தபோது, 230-240 ரன்கள் வெற்றி பெறக்கூடிய ஸ்கோர் என்று நினைத்தோம்.

பால் வேன் மீக்ரன் (நெதர்லாந்து)
பால் வேன் மீக்ரன் (நெதர்லாந்து)முகநூல்

நாங்கள் அந்த ரன்கள் எடுத்திருந்ததால் வெற்றி பெற முடியும் என்று நம்பினோம். ஆர்யன் தத், லோகன் வேன் பீக் இருவரும் முதல் 10 ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும்போதும் 20 நிமிடங்கள் ஃபீல்டிங்குக்கு ஒதுக்கியிருந்தோம். இன்று பாஸ் டி லீட் ஒரு அட்டகாசமான டைரக்ட் ஹிட் அடித்தார். ஒரு தனிப்பட்ட பெர்ஃபாமன்ஸை நிச்சயம் கைகாட்ட முடியாது. இது ஒரு டீம் பெர்ஃபாமன்ஸ்" - பால் வேன் மீக்ரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com