2024ம் ஆண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஓபன் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பார்க்கில் தொடங்கவிருக்கிறது. 2024 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரானது நாளை ஜனவரி 14ம் தேதிமுதல் தொடங்கி ஜனவரி 28ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி ஜனவரி 28ம் தேதியும், பெண்கள் ஒற்றையர் பிரிவு அதற்கு முந்தைய நாளிலும் முடிவை எட்டுகின்றன.
இந்நிலையில் இந்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச், டென்னிஸ் கோர்ட்டில் கிரிக்கெட் விளையாடி ஆஸ்திரேலிய ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். அதற்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஜோக்கோவிச்சுடன் சேர்ந்து டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தார். இந்த அழகான காட்சியை சச்சின் டெண்டுல்கர் கூட பகிர்ந்திருந்தார்.
கிரிக்கெட் குறித்தும் விராட் கோலி குறித்தும் சோனி ஸ்போர்ட்ஸ் உடனான இண்டர்வியூ ஒன்றில் பேசியிருக்கும் ஜோகோவிச், “விராட் கோலியும் நானும் சில வருடங்களாக குறுஞ்செய்தியனுப்பி பேசிவருகிறோம். அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் அவருடன் பேசுவதும் அவர் பேசுவதை கேட்பதும் எனக்கு கிடைத்த கௌரவம் மற்றும் பாக்கியம். அவருடைய கிரிக்கெட் சாதனைகளுக்காக நான் அவரை பாராட்டுகிறேன்” என புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும் தானும் கிரிக்கெட்டை கற்றுவருவதாக பேசிய அவர், “ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் கிரிக்கெட் பிரபலமான ஒரு விளையாட்டு. நானும் கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறேன், ஆனால் அதில் என்னால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. ஆனால் இந்தியாவிற்கு செல்வதற்கு முன் என்னுடைய கிரிக்கெட் நுட்பங்களை மெருகேற்றிவிட்டு தான் போவேன்” என்று சிரித்தபடியே பேசினார்.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரான நோவக், தன்னுடைய 25வது பட்டத்தையும் வென்று வெற்றிகரமான ஆண்டாக 2024-ஐ தொடங்க காத்திருக்கிறார்.